செலவே இல்லாமல் சர்க்கரை நோயை சரிசெய்வது சாத்தியம்! உங்களுக்கு தெரியுமா?
டயாபடிஸ் அல்லது சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்றாலே பலருக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது.
இன்றைய சூழலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி தாக்கும் நோய்களில் ஒன்றாகிவிட்டது சர்க்கரை நோய்.
ஆனால் இது ஒரு நோயே அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் இது ஒரு குறைபாடு மட்டுமே.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்று அழைக்கிறோம்.
இவை டைப் 1 மற்றும் டைப் 2 என வகைப்படுத்தப்படுகிறது, டைப் 1 என்பது நம் உடலில் இன்சுலின் சுரக்காத நிலை, டைப் 2 இன்சுலின் சுரந்தும் வேலை செய்யாத நிலை.
பெரும்பாலும் டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களே அதிகம், முறையற்ற உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் உருவாகிறது.
சர்க்கரை நோயை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால் ஆரோக்கியமான சந்தோஷமான வாழ்வு நிச்சயமே.
ஏனெனில் சர்க்கரை நோயின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க உடலில் அனைத்து உறுப்புகளையும் பாதித்துவிடும், இதயம், சிறுநீரகம் என உடல் உள்ளுறுப்புகளை பாதிப்படைய செய்வதால் ஆரம்ப நிலையிலேயே கட்டுக்குள் கொண்டு வருவது அவசியம்.
VeryWell
ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன?
சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, அதனை வெளியேற்ற சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதால் சிறுநீர் அடிக்கடி வெளியேறும்.
இதனால் உடலில் நீர்ச்சத்து குறையும் போது தாகம், நாவில் வறட்சி ஏற்படும். சில நேரங்களில் பார்வை மங்கலாக இருக்கலாம், தெளிவாக எதையும் பார்க்க முடியாமல் கூட போகலாம்.
மிக முக்கியமாக இன்சுலின் சரிவர வேலை செய்யாமல் போகும் போது உடல் எடை அதிகரிக்கலாம், இன்சுலின் குறையும் போது உடல் எடையும் குறையும்.
சுறுசுறுப்பாக இல்லாமல் மந்த நிலையில் எப்போதும் சோர்வாகவே உணர்வீர்கள்.
சிறிய காயங்கள் ஏற்பட்டால் கூட புண் ஆறுவதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும், கால் பாதங்களில் எரிச்சல், உணர்ச்சி இல்லாமல் இருப்பது போன்றவையும் முக்கியமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
வயிறு நிரம்ப சாப்பிட்டாலும் கூட சிறிது நேரத்தில் பசி ஏற்படும், அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டே இருப்பதும் சர்க்கரை நோயின் அறிகுறியே.
பலவீனமான பற்கள், ஈறுகளில் தேய்மானம், தோலில் எரிச்சல், பிறப்புறுப்புகளில் புண் போன்றவையும் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி?
* முதலில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது உடல் எடையில் தான், எடை அதிகம் இருந்தாலே சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 60 சதவிகிதம் உண்டு.
அமெரிக்க சர்க்கரை நோய் அமைப்பின் கூற்றுப்படி, சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள நபர்கள் தங்கள் எடையை 7 லிருந்து 10 சதவிகிதம் குறைத்துவிட்டாலே நல்லது என தெரிவிக்கிறது.
மேலும் உங்களது மருத்துவரை கலந்து ஆலோசித்துவிட்டு எடை குறைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் என அறிவுறுத்துகிறது.
* எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை செய்யாமல் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை செய்வதும் நன்மையை தரும்.
பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ஒருமுறை மூன்று நிமிட நடைப்பயிற்சி மேற்கொள்வது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து விடுமாம்.
சுமார் 32 சர்க்கரை நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது, அதாவது செலவே இல்லாமல் நடைப்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலமும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துவிடலாம்.
* இன்னும் சொல்லப்போனால் நம் பழக்கவழக்கங்களில் செய்யப்படும் சில எளிமையான மாற்றங்களே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம், நடந்து கொண்டே தொலைபேசியில் பேசுவது,
ஒரே இடத்தில் பல மணிநேரங்களாக அமர்ந்திருக்காமல் நடந்து கொண்டே இருப்பது, மனதிற்கினிய பாடல்களுக்கு சிறிய நடன அசைவுகள் என சின்னச்சின்ன செயல்கள் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.
* உங்கள் உணவை வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து என அனைத்தும் கலந்து கலவையாக எடுத்துக் கொள்ளுங்கள், நார்ச்சத்து மிகுந்த உணவுகள் செரிமானத்தை மேம்படுத்தும், உணவில் உள்ள சத்துக்களை நம் உடல் கிரகித்துக் கொள்ள இவை அவசியம்.
இதுமட்டுமின்றி சர்க்கரையின் அளவை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உங்களை சுறுசுறுப்பாக இயங்க செய்யவும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கியமாகிறது.