'கைதிகளுக்கு நாமே கஞ்சா கொடுக்கலாம்.,' குற்றப்பிரிவு ஆணையரின் சர்ச்சைக்குரிய புதிய முயற்சி!
பிரித்தானிய சிறைச்சாலைகளில் போதைப் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் வன்முறையைச் சமாளிக்கவும் கைதிகளுக்கு கஞ்சா வழங்கப்பட வேண்டும் என்று நார்த் வேல்ஸ் பொலிஸ் மற்றும் குற்றப்பிரிவு ஆணையர் (P.C.C) Arfon Jones தெரிவித்துள்ளார்.
Arfon Jones, இந்த திட்டத்தை சோதனைக்கு உட்படுத்த ஒரு முயற்சி செய்து பார்க்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
Swansea பல்கலைக்கழகத்தின் உலகளாவிய மருந்துக் கொள்கை ஆய்வகத்தின் சமீபத்திய ஆய்வறிக்கையைத் தொடர்ந்து இந்த பரிந்துரையை அவர் முன்வைத்துள்ளார்.
அறிக்கையின்படி, பிரித்தானிய சிறைகளில் உள்ள 13 சதவீத ஆண்கள் ஊரடங்கு விதிக்கப்பட்டதிலிருந்து சட்டவிரோத போதைப்பொருட்களுடன் ஒரு சிக்கலை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்டிப்பில் உள்ள சிறை ஆய்வாளர்களும், 52 சதவீத கைதிகள் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பெறுவது எளிது என்று கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது "சிறை அமைப்பின் பாதுகாப்புக்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தல்" என்று அது விவரித்தது.
சிறைகளில் உள்ள போதைப்பொருள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும், போதை மற்றும் வன்முறைக்கான "காரணங்களை அதிகாரிகள் கவனிக்க வேண்டும்" என்றும் Jones கூறினார்.
Opioids அடிப்படையிலான மருந்துகள் உட்பட கைதிகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரணி மருந்துகள் குறித்து அவர் கவலைப்படுவதாக அவர் மேலும் கூறினார்
"கைதிகளுக்கு Opioids பயன்படுத்தப்பட்டால், அவர்களுக்கு ஏன் கஞ்சாவை பரிந்துரைக்க முடியாது? Opioids கஞ்சாவை விட ஆபத்தான ஒன்று" என அவர் கூறினார்.
பதிலாக “கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் கஞ்சாவை வழங்குவோம், குற்றங்கள் குறைகிறதா என்று பார்ப்போம்” என்று அவர் தனது சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்துள்ளார்.