பிரித்தானிய பிரதமர் ரிஷியின் மனைவி தொடர்பில் எழுந்த சர்ச்சை: பிரதமருக்கு தலைக்குனிவு
அரசு பணத்தில் நன்மை பெறும் அமைப்பு ஒன்றுடன் தனது மனைவிக்கு தொடர்பு இருப்பதை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மறைத்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பிரதமர் ரிஷி விசாரணைக்குட்படுத்தப்பட இருக்கிறார்.
அரசு பணத்தில் நன்மை பெறும் அமைப்புடன் தொடர்பு
சமீபத்தில், பிரித்தானிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், குழந்தைகள் நலன் அமைப்புகளுக்கான உதவித்தொகை, சில நிபந்தனைகளுக்கு உட்படும் நிலையில் இரட்டிப்பாக்கப்படுவதாக அறிவித்திருந்தார் சேன்ஸலர் ஜெரமி ஹண்ட்.
பிரதமர் ரிஷியின் மனைவியான அக்ஷதா மூர்த்தி, குழந்தைகள் நல அமைப்பான Koru Kids என்னும் அமைப்பில் பங்குதாரராக உள்ளார்.
(PA Wire)
ஆகவே, பிரதமர் அறிவித்த சலுகை ஒன்றின் மூலம், அவரது குடும்பத்துக்கே கூடுதல் இலாபம் கிடைக்கிறதா என்பதைக் குறித்து ரிஷி பதிலளிக்கவேண்டுமென லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியின் துணை தலைவரான Wendy Chamberlain கோரியிருந்தார்.
இது குறித்து பிரதமரின் ஆலோசகரான Sir Laurie Magnus விசாரணை மேற்கொள்ளவேண்டும் என Wendy வலியுறுத்தியிருந்தார். அத்துடன், லேபர் கட்சியினரும் இது குறித்துக் கேள்வி எழுப்பினார்கள்.
பிரதமருக்கு மீண்டும் ஒரு தலைக்குனிவு
நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொருத்தவரை, அவர்கள் தங்கள் சொத்துக்கள் குறித்த விடயங்களை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும், எதையும் மறைக்கக்கூடாது என விதி உள்ளது.
அப்படி இருக்கும்போது, பிரதமர் ரிஷியின் மனைவியான அக்ஷதா மூர்த்தி, குழந்தைகள் நல அமைப்பான Koru Kids என்னும் அமைப்பில் பங்குதாரராக உள்ளது தொடர்பான விடயங்களை ரிஷி மறைத்தாரா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளதால், அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
(PA)
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தர நிலைகளுக்கான ஆணையரான Daniel Greenberg, இந்த விசாரணையை மேற்கொள்ள இருக்கிறார்.
பிரதமர் ரிஷி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துக்கள் குறித்த விடயங்கள் எதையும் மறைக்கக்கூடாது என்னும் விதி உட்பட விதிகள் எவற்றையாவது மீறினாரா என்பது குறித்து Daniel Greenberg விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்.
தான் பிரதமரானதும், சீட் பெல்ட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும், முந்தைய பிரதமர் போரிஸ் ஜான்சன் நடத்திய பார்ட்டியில் விதிகளை மீறி பங்கேற்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும், ஆக, அரசை மீண்டும் ஒழுக்க நெறிமுறைகளுக்குட்பட்டதாக மாற்றுவேன் என ரிஷி சூளுரைத்திருந்த நிலையில், அவரே தன் மனைவிக்கு அரசு பணத்தில் நன்மை கிடைப்பது தொடர்பிலான ஒரு விடயத்தை மறைத்ததாக விசாரணைக்குட்படுத்தப்பட இருப்பதால், பெரும் தலைக்குனிவை சந்திக்கும் நிலைமைக்கு ஆளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.