புலமை பரிசில் பரீட்சை வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை! பரீட்சைகள் திணைக்களம் விளக்கம்
நாடளாவிய ரீதியில் 2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை (22-01-2022) நடைபெற்றது.
இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் 255062 மாணவ,மாணவியரும், தமிழ்மொழி மூலம் 85446 மாணவ மாணவியரும், பரீட்சைக்காக தோற்றியிருந்ததுடன், 2943 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றிருந்தது.
இந்நிலையில்,புலமை பரிசில் பரீட்சை குறித்து பல்வேறு பிரச்சினைகள் பதிவாகியிருந்ததுடன், பரீட்சையின் வினாப்பத்திரங்கள் பரீட்சை தினத்திற்கு முன்பாகவே வௌியானதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து விசாரணை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 2021, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாப்பத்திரங்கள், பரீட்சை தினத்திற்கு முன்பாகவே வௌியானதாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாணவர்களிடம் வினாத்தாள்கள் கையளிக்கப்பட்டதன் பின்னர், சில வினாத்தாள்கள் நிழற்படம் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதனால் பரீட்சைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன கூறியுள்ளார்.
மேலும்,சில பரீட்சை மத்திய நிலையங்களில் நீண்ட நேரத்திற்கு பின்னர் பரீட்சை வினா தாள்கள் வழங்கப்பட்ட போதிலும்,விடை எழுதுவதற்கான நேரத்தை மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நம்பிக்கை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.