போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்.., அரசு பள்ளியில் நடந்த ஆன்மீக சொற்பொழிவால் சர்ச்சை
சென்னையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டதால் சர்ச்சை உருவாகியுள்ளது.
ஆன்மீக சொற்பொழிவு
சென்னையில் அசோக் நகரில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் படிக்கும் 12 -ம் வகுப்பு மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றை நடத்த வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியை முடிவு செய்தார்.
பின்னர், சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவர் வரவழைக்கப்பட்டு சொற்பொழிவு நடத்தப்பட்டது. அப்போது அவர் மறுபிறவி குறித்து பேசியது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.
அவர் பேசுகையில், "மற்ற பிறவிகளில் செய்த பாவங்களால்தான் மறுபிறவி கிடைக்கிறது. போன ஜென்மத்தில் பாவங்கள் செய்தவர்கள் தான் மறுபிறவியில் ஏழைகளாகவும், மாற்றுத்திறனாளிகளாகவும் பிறக்கின்றனர்.
மேலும், பாவங்கள் செய்ததால் தான் கால், கை இழந்து, கண் பார்வையற்றவர்களாக பிறக்கின்றனர்" என்றார்.
இதற்கு அங்கிருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர், சொற்பொழிவாற்றிய மகா விஷ்ணு என்பவரை அறிவற்றவர் என்று விமர்சனம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நிகழ்ச்சி குறித்து தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |