பயணிகள் தொடர்பில் சுவிட்சர்லாந்து எடுக்கவிருக்கும் ஒரு நடவடிக்கையால் உருவாகியுள்ள சர்ச்சை
பாதுகாப்பு கருதி பயணிகள் தொடர்பில் சுவிட்சர்லாந்து எடுக்கவிருக்கும் ஒரு நடவடிக்கை சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
2001ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி, தீவிரவாதிகள் விமானங்களைக் கொண்டு இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்திய விடயம் உலகம் முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு வரும் அனைத்துப் பயணிகளும் பாஸ்போர்ட் எண், பிறந்த திகதி, பணம் செலுத்தும் விதம் முதலான தங்களைக் குறித்த தகவல்களைக் கையளிக்க அமெரிக்கா கோரியுள்ளது. சந்தேகத்துக்குரிய பயணிகளின் பின்னணியை ஆராய அதிகாரிகள் அந்த தகவல்களைப் பயன்படுத்துகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலும் இதே தகவல்களைக் கோருகிறது, ஐரோப்பிய ஒன்றியமோ அது தொடர்பான சட்டத்தையே உருவாக்கிவிட்டது.
Photo by Frankentoon Studio on Pexels.com
தற்போது, சுவிட்சர்லாந்து முதலான பல நாடுகளும் இதே திட்டத்தை அறிமுகம் செய்ய விரும்புகின்றன. சுவிட்சர்லாந்தின் பெடரல் கவுன்சில், பயணிகளின் தரவுகளைக் கொண்டு ஒரு தேசிய பதிவேட்டையும், அந்த தரவுகளை ஆய்வு செய்ய ஒரு சிறப்புக் குழுவையும் உருவாக்க விரும்புகிறது. இந்த திட்டம் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உதவும், சந்தேகத்துக்குரிய நபர்களை அடையாளம் கண்டு ஒரு மோசமான தாக்குதலை தடுக்க உதவலாம் என சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், சுவிட்சர்லாந்தில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பும் உருவாகியுள்ளது. Jorgo Ananiadis என்னும் அரசியல்வாதி, இந்த திட்டம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியுள்ளார். அப்படியே பயணிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டாலும், மிக முக்கியமான அடிப்படைத் தகவல்கள் மட்டும், அதுவும் குறைந்த காலகட்டத்துக்கு வேண்டுமானால் சேகரிக்கப்படலாம் என்கிறார் அவர்.