6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்த நயன்தாரா - விக்கி? வாடகைத்தாய் சர்ச்சையில் திடீர் திருப்பம்
நயன்தாரா - விக்னேஷ் சிவம் தம்பதி விவகாரத்தில் திடீர் திருப்பம் என தகவல்.
வாடகைத்தாய் தொடர்பில் சர்ச்சை எழுந்த நிலையில் இருவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
வாடகைத்தாய் விவகாரத்தில் திடீர் திருப்பமாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோர் 6 வருடங்களுக்கு முன்பே பதிவுத்திருமணம் செய்து கொண்டதாக உறுதிப்படுத்தபடாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இது குறித்த ஆதாரங்களை தம்பதி சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் 9 ஆம் திகதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதன்பின், தம்பதியினர் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றனர். இந்நிலையில்,சமீபத்தில் விக்னேஷ் சிவன் தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதை அறிவித்தார்.
மேலும், திருமணம் ஆன 4 மாதத்திற்குள் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதால் தம்பதியினர் வாடகைத் தாய் முறை மூலமே குழந்தைகள் பெற்றிருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
இருப்பினும், வாடகைத் தாய் சட்டத்தின்படி, திருமணமான தம்பதி ஐந்து ஆண்டுகள் கழித்தே வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவி 25-50 வயதுக்குள், கணவன் 26-55 வயதுக்குள் இருந்தால், அந்தத் தம்பதிகள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற தகுதியானவர்கள் என்று சட்டம் கூறுகிறது.
அதனால், இந்த விவகாரத்தில் விதிமீறல் உள்ளதா என்று மருத்துவத் துறை சேவைகள் இயக்குநர் மூலம் விளக்கம் கேட்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து விக்கி - நயன்தாரா குழந்தைகள் விவகாரத்தை விசாரிக்க மருத்துவத் துறை சேவைகள் துணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு விசாரணையை அண்மையில் துவங்கியது.
இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்ததற்கும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் ஒப்பந்தப் பதிவு செய்ததற்கான ஆதாரங்களையும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தரப்பினர் சமர்ப்பித்ததாக உறுதிப்படுத்தபடாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் வாடகைத் தாய் விவகாரத்தில் நிலவி வரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.