67 வயது அமெரிக்கருக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றம்! 15 ஆண்டுகளில் முதல் முறை
அமெரிக்காவில் இரட்டைக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மட்டையால் அடித்து கொலை
தெற்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்தவர் பிரெட் சிக்மன்(67). கடந்த 2001ஆம் ஆண்டில் இவர் தனது முன்னாள் காதலியை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றிருக்கிறார்.
மேலும், காதலியின் பெற்றோரை பேஸ்பால் மட்டையால் அடித்தே கொலை செய்துள்ளார். இதனையடுத்து சிக்மனிடம் இருந்து தப்பிய முன்னாள் காதலி பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார், பிரெட் சிக்மனை கைது செய்தனர். நீதிமன்ற விசாரணைக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
15 ஆண்டுகளில் முதல் முறை
இந்த நிலையில் எந்த வகையில் மரண தண்டனையை நிறைவேற்றலாம் என்று சிக்மனிடம் கேட்கப்பட்டது. அவர் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரினார்.
அதன்படியே நேற்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக இம்முறையில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்நாட்டில் மின்சாரம் பாய்ச்சுதல், விஷவாயு செலுத்துதல், துப்பாக்கியால் சுடுதல், விஷ ஊசி செலுத்துதல் என பல்வேறு வழிகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |