கனேடிய பல்கலையில் பயிலும் பயங்கர குற்றவாளி: அதிர்ச்சியில் மாணவியர்
Convicted killer attending McGill law school divides students over safety: குற்றவாளி ஒருவர் தங்களுடன் படிப்பது தெரியவந்துள்ளதால், கனேடிய பல்கலை ஒன்றின் மாணவ மாணவியர் அச்சமடைந்துள்ளனர்.

கனடாவின் மொன்றியலில் அமைந்துள்ள மெக் கில் பல்கலையில், சட்டம் பயில்கிறார் ஜெஃப்ரி ஜார்ஜ் எவர்ட் என்னும் நபர்.
பயங்கர குற்றவாளி
விடயம் என்னவென்றால், 1984ஆம் ஆண்டு, மே மாதம், தன்னிடம் லிஃப்ட் கேட்ட கொரினா (Corrina Lea Makiev) என்னும் இளம்பெண்ணை, கழுத்தை நெறித்து, வன்புணர்ந்து, அடித்து நொறுக்கி, நதி ஒன்றில் வீசினார் எவர்ட்.

பின்னர் அந்த இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
அடுத்த மாதம், அதாவது, ஜூன் மாதம் 17ஆம் திகதி, தன்னை தத்தெடுத்தவர்கள் வீட்டுக்கு வந்த எவர்ட், அங்கு ஒரு 15 வயது சிறுமி தனியாக தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்ட எவர்ட், அந்தச் சிறுமியை தூக்கிச் சென்று, அடித்து நொறுக்கியுள்ளார்.
அவளை எவர்ட் ஒரு பள்ளத்தில் வீசிச் செல்ல, அவள் உயிர் பிழைந்துவிட்டாள். ஆனால், அவளுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டு, அவளது கை கால்கள் செயலிழந்துவிட்டன.
இன்னமும் அவள் அன்றாடகத் தேவைகளுக்கு மற்றவர்களை நம்பித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.
ஆக, எவர்ட் மீது ஒரு கொலைக் குற்றச்சாட்டும், ஒரு கொலை முயற்சிக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார் அவர்.
அதிர்ச்சியில் மாணவியர்
இந்நிலையில், 2025ஆம் ஆண்டு அவருக்கு பரோல் வழங்கப்பட, ஆகத்து மாதம் முதல் மெக் கில் பல்கலையில் இணைந்து சட்டம் படித்துவருகிறார் எவர்ட்.

இதற்கிடையில், எவர்ட் குறித்து அவரது சக மாணவ மாணவியருக்கு சமீபத்தில் தெரியவந்துள்ளது.
ஒரு பெண்ணை சீரழித்துக் கொன்று, மற்றொரு பெண்ணைக் கொலை செய்ய முயன்ற ஒருவர் தங்களுடன் படிப்பது தெரியவந்துள்ளதால் மாணவ மாணவியர் அச்சமடைந்துள்ளனர்.
பல்கலையில் படிப்பவர்களில் பாதிக்கும் மேல் இளம்பெண்கள் என்று கூறும் சில மாணவிகள், பல்கலை இந்த விடயம் குறித்து தெரியப்படுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
பல்கலை, தனிப்பட்ட நபர் குறித்து சொல்வது அவரது தனியுரிமையை மீறும் விடயம் எனக் கூற, எவர்ட்டின் சட்டத்தரணியான நோரா டெம்னதி, எவர்ட் தனது பின்னணி குறித்து மறைக்கவில்லை என்கிறார்.

பிள்ளைகள் பயப்படுவது குறித்து நோராவிடம் கேட்டால், எவர்ட் குற்றச்செயலில் ஈடுபட்டபோது அவருக்கு வயது 20, இப்போது அவர் தனது 60 வயதுகளில் இருக்கிறார். அவர் மாறிவிட்டார் என்கிறார்.
அத்துடன், குற்றம் செய்தவர்கள் திருந்தி வாழ வாய்ப்புக் கொடுப்பதற்குத்தானே மறுவாழ்வு மையங்களே அமைக்கப்பட்டுள்ளன என்கிறார் அவர்.
இதற்கிடையில், எவர்ட் அக்டோபர் மாதத்திலிருந்து பல்கலைக்கு வருவதில்லை என்று தற்போது கூறியுள்ள மெக் கில் பல்கலை தரப்பு, மாணவ மாணவியரின் பாதுகாப்புதான் முக்கியம் என்றும், ஆகவே, சம்பந்தப்பட்ட நபர் தொடர்பில் முக்கிய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் மீளாய்வு துவக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.