ஆரம்பத்தில் நீக்கம்.,காயத்தால் வீரர் வெளியேற கிடைத்த வாய்ப்பு: ருத்ர தாண்டவமாடிய கான்வே கூறிய விடயம்
முத்தரப்பு டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்பேயை வீழ்த்தியது.
ஹென்றியின் தாக்குதல் பந்துவீச்சு
ஹாராரேயில் நடந்த டி20 போட்டியில் ஜிம்பாப்பே மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய ஜிம்பாப்பே அணியில் பென்னெட் (21), மதேவெரே (36) நல்ல தொடக்கம் தந்தனர்.
ஆனால் அதன் பின்னர் வந்த வீரர்கள் ஹென்றியின் மிரட்டலான பந்துவீச்சில் ஆட்டமிழக்க, ஜிம்பாப்பே 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 120 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
மேட் ஹென்றி (Matt Henry) 3 விக்கெட்டுகளும், மில்னே, சான்ட்னர், பிரேஸ்வெல் மற்றும் ரச்சின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் செய்பெர்ட் 3 ஓட்டங்களில் வெளியேறினார்.
எனினும் டெவோன் கான்வே (Devon Conway) அதிரடியில் மிரட்டினார். ரச்சின் ரவீந்திரா 19 பந்துகளில் 30 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்க, டேர்ல் மிட்செல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 13.5 ஓவரிலேயே 122 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. கான்வே 40 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்களும், மிட்செல் 26 ஓட்டங்களும் குவித்தனர்.
டெவோன் கான்வே
ஆரம்பத்தில் ஜிம்பாப்பேக்கான சுற்றுப்பயணக் குழுவில் இருந்து டெவோன் கான்வே நீக்கப்பட்டார்.
ஆனால், ஃபின் ஆலனின் காலில் காயம் ஏற்படவே அவருக்கு பதிலாகதான் கான்வே அணிக்கு அழைக்கப்பட்டார்.
அரைசதம் விளாசி தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த சூழலில் மீண்டும் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சிறிது காலம் ஆகிவிட்டது. எனவே, மீண்டும் அணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது மிகவும் அருமையாக உள்ளது.
வெளிப்படையாகவே ஃபின் ஆலனின் காயம் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் எனக்கு மீண்டும் அணியுடன் இருக்கவும், நீண்ட காலமாக நான் பார்க்காத இரண்டு முகங்களைப் பார்க்கவும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று (நேற்று) வெற்றிக்கு பங்களித்தது மகிழ்ச்சி அளிக்கிறது" என தெரிவித்தார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற கான்வே மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |