சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.500 குறைப்பு! முதல்வர் அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி
புதுச்சேரியில் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ரூ.500 குறைத்து முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அவர் வெளியிட்ட அறிவிப்பின்படி, சிவப்பு அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் 200 ரூபாய் மானிய குறைப்பும் சேர்த்து கூடுதலாக ரூ.300 மானியம் வழங்குகிறது.
முதல்வர் கூறியது
இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், "சமையல் எரிவாயுவின் விலை ரூ.200- குறைக்கப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மக்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் அதற்கு ஒரு உதாரணம் ஆகும்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏற்கனவே 9.1 கோடி சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. ஏழைப் பெண்களுக்கு கூடுதலாக 75 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளுக்கு மத்திய அமைச்சரவை இப்போது ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகள் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு இன்று முதல் மேலும் 200 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
ஓணம் மற்றும் ரக்ஷா பந்தன் தினத்தில் மகளிருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பரிசாக இந்த விலைக் குறைப்பு உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மாநில அரசின் சார்பில் ஏற்கனவே சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.300-ம், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு ரூ.150-ம் சமையல் எரிவாயு மானியம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு ரூ.200- மானியம் அளித்திருப்பது, புதுச்சேரி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்துவாக உள்ளது.
மத்திய அரசின் இந்த விலை குறைப்பை உளமார வரவேற்கிறேன். புதுச்சேரி யூனியன் பிரதேச குடிமக்கள் சார்பாக பிரதமரருக்கு எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |