கொரோனா இல்லை என்பதற்கான ஆவணம் இருந்தும் கனேடிய பெண்ணை இரகசிய இடத்தில் அடைத்த பொலிசார்: ஒரு எச்சரிக்கை செய்தி
அமெரிக்கா சென்று திரும்பிய ஒரு பெண்ணிடம் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆவணம் இருந்தும் அவரை அதிகாரிகள் தனியறை ஒன்றில் அடைத்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனேடியரான Nikki Mathis (35), வேலை விடயமாக அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு கனடா திரும்பியிருக்கிறார்.
கால்கரியில் விமான நிலையம் வந்து இறங்கிய அவரிடம் இருந்த கொரோனா தொடர்பான ஆவணத்தை சரிபார்த்துள்ளனர் அதிகாரிகள்.
சிறிது நேரத்தில் பொலிசார் பலர் அவரை சுற்றி வளைத்து வெள்ளை நிற வேன் ஒன்றில் ஏற்றி எங்கோ அழைத்துச் சென்றுள்ளனர்.
தங்களுடன் வர மறுத்தால் கைது செய்து அழைத்துச்செல்வோம் என அவர்கள் கூற, தனது கணவரான Chrisக்கு மொபைலில் தகவலளித்துள்ளார் Nikki. Chris அந்த அதிகாரிகளிடம் என்ன ஆயிற்று, தன் மனைவி எங்கே அழைத்துச் செல்லப்படுகிறார் என்று விசாரிக்க, எதுவும் கூற முடியாது என மறுத்துவிட்டார்களாம் அதிகாரிகள்.
ஹொட்டல் ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்ட Nikki, அங்கு தன்னைப்போலவே பலர் அடைத்துவைக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளார்.
அங்கே தனியாக அவர் பதற, வீட்டில் Chrisம் குடும்பத்தினரும் Nikkiக்கு என்ன ஆயிற்று, அவர் எங்கே இருக்கிறார், அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா என பதற, இரண்டு நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார் Nikki.
நடந்தது என்னவென்றால், வெளிநாடுகளுக்கு சென்று திரும்புவோர் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டுவதற்கான ஆவணத்தை தயார் செய்து வைத்திருக்கவேண்டும்.
Nikkiயும் கொரோனா பரிசோதனை செய்து தனக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் ஆவணத்தை வைத்திருந்திருக்கிறார்.
என்றாலும், அவர் செய்தது பி.சி.ஆர் பரிசோதனை அல்ல என்பதுதான் பிரச்சினை. ஆக, இது ஒரு எச்சரிக்கை செய்தி! கொரோனா இல்லை என்பதைக் காட்டும் ஆவணம் மட்டும் போதாது, அது பி.சி.ஆர் முறையிலும் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்பதுதான் இங்கு முக்கியம்.
ஆகவே, பயணம் தொடர்பில் கொரோனா பரிசோதனை செய்துகொள்வோர், அது பி.சி.ஆர் முறையில் செய்யப்பட்டுள்ளதை, அல்லது கொரோனா ஆன்டிஜன் உள்ளது என்பதைக் காட்டும் சோதனை இல்லாமல், கொரோனா மூலக்கூறு உள்ளதா என்பதைக் காட்டும் சோதனை செய்துகொள்வது அவசியம் என்பதை இந்த செய்தி காட்டியுள்ளது.