ஜேர்மனியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா... அவசர நிலை நீட்டிக்கப்படுமா?
ஜேர்மனியில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், அவசர நிலை நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சனிக்கிழமையன்று ஜேர்மனியில் மிக அதிக அளவாக 15,145 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல், ஞாயிற்றுக்கிழமை 11,411 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டுமே கொரோனா தொற்று 57 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், உயிரிழப்புகள் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் New York Times என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.
அவசர நிலை நீட்டிக்கப்படுமா?
நவம்பர் 25ஆம் திகதியுடன் அவசர நிலை முடிவுக்கு வரும் நிலையில், அதை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து ஜேர்மனியின் 16 மாகாணங்களும் விவாதித்து வருகின்றன.
இப்போதைக்கு ஜேர்மனியில் கடைகள் மற்றும் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும்போது மாஸ்க் அணிதல் கட்டாயம், சுற்றுலாப்பயணிகள் உணவகங்கள் முதலான கட்டிடங்களுக்குள் நுழைவதற்கு தடுப்பூசி பெற்றதற்கான அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டதற்கான ஆதாரத்தை அல்லது கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்னும் சான்றிதழைக் காட்டவேண்டும். இந்த விதிகள் அனைத்துக் குடிமக்களுக்கும் கூட பொருந்தும்.
இதற்கிடையில் அவசர நிலை நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ள ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் Jens Spahn, ஆனாலும், மேற்கூறிய கட்டுப்பாடுகள் அடுத்த இளவேனிற்காலம் வரை நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், கொரோனா தொற்று அதிகரித்தாலும், அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொரோனா தடுப்பூசி பெற்றுவிட்டதால், ஜேர்மனி அதையும் சமாளிக்கும் என்றும் கூறியுள்ளார் அவர்.