பிரான்ஸ் தலைநகரில் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் கொரோனா கட்டுப்பாடு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், மாஸ்க் அணிதல் கட்டாயம் என்னும் கட்டுப்பாடு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கூட்டமான எல்லா இடங்களிலும் மாஸ்க் அணிதல் கட்டாயம் என்னும் கட்டுப்பாட்டை நீதிமன்றங்கள் ரத்துசெய்த நிலையில், பாரீஸ் அதிகாரிகள் மீண்டும் அந்தக் கட்டுப்பாட்டைத் தற்போது அமுல்படுத்தியுள்ளார்கள்.
பாரீஸ் பொலிசார் திறந்தவெளி பொது இடங்கள் அனைத்திலும் மாஸ்க் அணிதல் கட்டாயம் என உத்தரவிட்டிருந்தார்கள்.
ஆனால், சென்ற வாரம், இந்த உத்தரவு மிக அதிகம் (excessive) என்று கூறி, நீதிமன்றம் ஒன்று அதை ரத்து செய்தது.
அதைத் தொடர்ந்து, நேற்று, திங்கட்கிழமை, பாரீஸ் பொலிஸ் துறைத் தலைவரான Didier Lallement, சில குறிப்பிட்ட திறந்தவெளி பொது இடங்களில் மாஸ்க் அணிதல் அவசியம் என புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, எந்த இடங்களெல்லாம் அதிக கூட்டம் சேரும் இடங்கள் என கருதப்படுகின்றனவோ, அந்த இடங்களில் மாஸ்க் அணிதல் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உதாரணமாக,
- திறந்தவெளிச் சந்தைகள், விற்பனை நிலையங்கள்
- பேரணிகள், ஊர்வலங்கள், கூட்டங்கள் அல்லது 10 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடும் அனைத்து மக்கள் கூடுகைகள்
- பேருந்து நிலையங்கள் போன்ற பொதுப்போக்குவரத்துக்காக மக்கள் காத்து நிற்கும் இடங்கள்
- ஷாப்பிங் சென்டர்களுக்கு செல்வதற்காக வரிசையில் காத்திருப்போர்
- பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பிரார்த்தனைக்காக மக்கள் கூடும் இடங்களுக்குள் செல்ல காத்திருப்போர்
- எந்த பொது இடத்திலானாலும் வரிசையில் நிற்போர் அனைவரும் மாஸ்க் அணிதல் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பொதுப்போக்குவரத்து, ஷாப்பிங் சென்டர்கள், பிரார்த்தனைக்காக கூடும் இடங்கள் ஆகிய இடங்களுக்குள் மாஸ்க் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த இடங்களுக்குள் நுழைவதற்காக வரிசையில் நிற்கும்போதும் மாஸ்க் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.