சுவிட்சர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இதற்கு மேல் தேவைப்படாது: சுவிஸ் தொற்றுநோயியல் நிபுணர் கருத்து
சுவிட்சர்லாந்தில், கோடைகாலத்திலிருந்து கொரோனா கட்டுப்பாடுகளுக்கு அவசியம் இருக்காது என சுவிஸ் தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
Omicron அலை கடந்துபோனபின், மாஸ்க் அணிதல், 2G கட்டுப்பாடுகள் முதலானவற்றிற்கான அவசியம் இருக்காது என சுவிஸ் தொற்றுநோயியல் நிபுணரான Marcel Tanner தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நாம் தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் டோஸ் பெற்று சில கட்டுப்பாடுகளை நாமாகவே மதித்து நடக்கும் நிலையில், நாடு முழுமைக்குமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ளலாம் என அவர் பரிந்துரைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் எளிதாக மாயமாக மறைந்துவிடப்போவதில்லை என்று கூறும் அவர், இன்னமும் சிறிய அலைகள் உருவாகுவது தொடரலாம் என்கிறார். ஆனாலும், இலக்கு வைத்து அவ்வப்போது எடுக்கும் நடவடிக்கைகள், மற்றும் நாமாகவே எடுத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அந்த தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார் அவர்.
அத்துடன், Omicron அலை கடந்துபோன பிறகு, மொத்தமாக பலருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்வதையும் தரவுகளை சேகரிப்பதையும் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்றும் Tanner கூறுகிறார்.
அவற்றல் புதிதாக அச்சம்தான் உருவாகும் என்கிறார் அவர்.
ஆகவே, ப்ளூ காய்ச்சலுக்கு செய்வதைப்போல, அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டும் பரிசோதனைகள் மேற்கொள்வது அர்த்தமுள்ள செயலாக இருக்கும் என்பது Tannerஇன் கருத்து.