ஜேர்மனியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்துள்ள கொரோனா தொற்று
ஜேர்மனியில், ஏழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள் என்னும் எண்ணிக்கை, தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்துள்ளது.
திங்கட்கிழமை நிலவரப்படி, ஏழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள் என்னும் எண்ணிக்கை 1,459.8 ஆக குறைந்துள்ளது.
இதுவே, ஞாயிற்றுக்கிழமை, அந்த எண்ணிக்கை 1,466.5 ஆக இருந்தது. டிசம்பர் இறுதிக்குப் பிறகு, முதன்முறையாக தொடர்ந்து இரண்டு நாட்களாக இந்த எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த 24 மணி நேரத்தில், ஜேர்மனியில் 76,465 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன், 42 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள்.
இதற்கிடையில், ஜேர்மனியில் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது, Omicron அலையில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறதா என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை.
ஆனாலும், நிபுணர்களும் அரசியல்வாதிகளும் ஜேர்மனி Omicron அலையை மேற்கொள்ளும் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், பெடரல் அரசும் மாகாணங்களும் மார்ச் மாதத்தில் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வர இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனைகளின் நிலை என்ன?
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஏழு நாட்களில் 100,000 பேரில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 6.46ஆக இருந்ததாக Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஜேர்மனி முழுவதிலும் உள்ள தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் 2,438 கொரோனா நோயாளிகள் இருக்கிறார்கள். அவர்களில் 1,149 பேருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், வரும் இலையுதிர் காலத்தில் மீண்டும் ஒரு புதிய கொரோனா அலை உருவாகலாம் என Robert Koch நிறுவனம் எதிர்பார்ப்பதாக ஜேர்மன் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.