கொரோனா தீவிர சிகிச்சை பிரிவுகள் இனி தேவையில்லை... மூடும் மருத்துவமனைகள்: எந்த நாட்டில் தெரியுமா?
இஸ்ரேல் நாட்டில் கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மொத்தமாக சரிவடைந்துள்ளதாக நம்பிக்கை அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது
. இதனால், கொரோனா தீவிர சிகிச்சை பிரிவுகளை பெரும்பாலான மருத்துவமனைகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலில் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நான்கு மாதங்களுக்கும் மேலாக முதல் முறையாக 300 க்கும் கீழ் குறைந்துள்ளது.
கடுமையான நோய்வாய்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 290 என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.
நான்கு மாதங்கள் தொடர் தடுப்பூசி அளிக்கும் திட்டம் காரணமாக, கொரோனா பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் சரிவடைந்து காணப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 274 பேர்களுக்கு மட்டும் புதிதாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது. மட்டுமின்றி, பல மருத்துவமனைகள் ஏற்கனவே தங்கள் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவுகளை மூடிவிட்டன.
இதுவரை, மொத்தம் 9 மில்லியன் இஸ்ரேலியர்களில் கிட்டத்தட்ட 5.3 மில்லியன் பேர் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட 4.9 மில்லியன் குடியிருப்பாளர்கள் தங்களுக்கான முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள் மீண்டும் தங்கள் முந்தைய வாழ்க்கை நிலைக்கு திரும்பியுள்ளனர் என்றே தெரிய வந்துள்ளது.