கொரோனா தெரியும்... ப்ளூரோனா தெரியுமா? கனடாவில் உருவாகியுள்ள புதிய பிரச்சினை குறித்து அறிந்துகொள்வோம்
கொரோனா போன்றே ஒலிக்கும் ப்ளூரோனா என்னும் பிரச்சினை குறித்து கனேடியர்கள் பரவலாக பேசி வருகிறார்கள்.
இந்த ப்ளூரோனா (flurona) என்பது என்ன? அது ஒரு புதிய வைரஸா? அல்லது புதிய நோயா? அது ஆபத்தானதா? என பல கேள்விகள்...
அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இந்த செய்தி.
ப்ளூ காய்ச்சலுக்கான அறிகுறிகள் கொண்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் அல்லது கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்பதுதான் கனடாவில் பொதுவாக சுகாதாரத்துறை அலுவலர்கள் வழங்கும் ஆலோசனை.
ஆனால், உங்களுக்கு ஒரே நேரத்தில் ப்ளூ காய்ச்சலும் கொரோனாவும் வந்தால் என்ன செய்வது? இரண்டும் ஒன்றா?
இல்லை, இந்த நிலையின் பெயர்தான் ப்ளூரோனா!
அதாவது, ஒரே நபருக்கு ப்ளூ காய்ச்சலும், கொரோனா தொற்றும் ஒரே நேரத்தில் தாக்கியிருக்கும் நிலைதான் ப்ளூரோனா என்று அழைக்கப்படுகிறது.
சரி, ஒரே நபருக்கு ஒரே நேரத்தில் இரண்டு வைரஸ்களால் தொற்று உருவாகுவது சாத்தியமா?
அப்படி இதற்கு முன் நிகழ்ந்துள்ளதா என்றால், ஆம், ஒருவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு வைரஸ்களால் தொற்று உருவாகுவது சாத்தியம்தான். அது அசாதாரணமான ஒரு நிகழ்வு அல்ல.
ஆனால், கனடாவில் இது வருடாந்திர ப்ளூ சீஸன். இந்நிலையில், கொரோனா தொற்றும் அதிகரித்துவருவதால் ப்ளூரோனா குறித்து மருத்துவர்களிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நமக்கு ப்ளூரோனா வந்திருப்பதை நாமே கண்டறிய முடியுமா?
ப்ளூ காய்ச்சலுக்கும் கொரோனாவுக்கும் ஒரே விதமான அறிகுறிகள் பல காணப்படுவதால் பரிசோதனை செய்யாமல் அதைக் கண்டுபிடிப்பது கடினம். ஆகவே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்வதுதான் சரியான செயல்.
ப்ளூரோனா என்பது ஒரு புதிய மரபணு மாற்ற வைரஸா?
Omicron, டெல்டா போல, ப்ளூரோனா ஒரு புதிய மரபணு மாற்ற வைரஸ் அல்ல. அத்துடன் முற்றிலும் வித்தியாசமான அமைப்பு கொண்ட ப்ளூ வைரஸ், கொரோனா வைரஸுடன் இணையாது, புதிய வைரஸ் ஒன்றை உருவாக்கவும் செய்யாது.
ஒரு நல்ல செய்தி
ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இரண்டுக்குமே, அதாவது ப்ளூ காய்ச்சலுக்கும், கொரோனாவுக்கும் தனித்தனியே தடுப்பூசிகள் உள்ளன என்பதுதான்!
ஒரு எச்சரிக்கை
ஆனால், ப்ளூரோனாவுக்கு சிகிச்சையளிப்பது கொஞ்சம் ஆபத்தானதுதான் என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம், இரண்டு நோய்களுக்காகவும் கொடுக்கப்படும் மருந்துகள் ஒன்றுடன் ஒன்று வேதிவினையாற்றி பிரச்சினை ஏற்படலாம் என எச்சரிக்கிறார்கள் அவர்கள்.