பிரான்சில் மீண்டும் தலைவிரித்தாடும் கொரோனா! புதிய உச்சத்தை எட்டிய தினசரி தொற்று எண்ணிக்கை: பீதியில் மக்கள்
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,501 COVID-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 6 மாதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். சமீப நாட்களாக ஒவ்வொரு நாளும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று நேற்று வெளியிடப்பட்ட பொது சுகாதார ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாக தினசரி தொற்று எண்ணிக்கை சராசரியாக 20,000 முதல் 25,000 வரை உள்ளதாக தெரியவந்துள்ளது. பிப்ரவரி 25, மார்ச் 10 ஆகிய திகதிகளில் பாதிப்பு எண்ணிக்கை 30,000-த்தை கடந்துள்ளது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 22-ஆம் திகதி உச்சபட்சமாக 41,622 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதிலிருந்து ஒரே வாரத்தில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாட்டில் இரண்டாவது தேசிய உறடங்கை அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 38,501 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இது இந்த ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்படாத உட்சபட்ச பாதிப்பு எண்ணிக்கையாகும்.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 91,437 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நாடு பெருந்தொற்றின் மூன்றாவது அலைக்குள் நுழைந்துள்ளது என கூறியுள்ளார்.
இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து அதிபர் Macron மற்றும் சுகாதார அமைச்சர் Olivier Veran ஆகியோர் உரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவருகின்றனர்.