திங்கட்கிழமை முதல் சுவிட்சர்லாந்தில் நெகிழ்த்தப்படவிருக்கும் கொரோனா கட்டுப்பாடுகள்
சுவிட்சர்லாந்து வரும் திங்கட்கிழமை (மே 31) முதல், மேலும் பல கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்த உள்ளது. அவை என்னென்ன என்று பார்க்கலாம். திங்கட்கிழமை முதல் சுவிட்சர்லாந்தில் நான்காவது கட்ட கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட உள்ளன.
சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கொரோனா பரவல் நிலைமை முன்னேற்றமடைந்துள்ளதைத் தொடர்ந்து பெடரல் அரசு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததைவிட கூடுதல் கட்டுப்பாடுகளை நெகிழ்த்த உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி வீட்டிலிருந்து வேலை பார்ப்பது கட்டாயம் அல்ல என்று கூறியுள்ள அரசு, அது இனி பரிந்துரைதான் என்று கூறியுள்ளது. இனி படிப்படியாக மக்கள் அலுவலகங்களுக்குத் திரும்பலாம் என்று கூறப்பட்டுள்ளதுடன், அலுவலகங்களில் பணி புரிவோர் வாரந்தோறும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை முதல் உணவகங்கள் கட்டிடங்களுக்குள்ளும் உணவு பரிமாறலாம், மேஜை ஒன்றைச் சுற்றி நான்கு பேர் வரை அமரலாம், உணவகத்துக்குள் அங்கும் இங்கும் நடக்கும்போது மட்டும் மாஸ்க் அணியவேண்டும், இவ்வளவு வசதிகளும் அனுமதிக்கப்பட்டாலும், உணவகங்களுக்கு வருவோர் தங்கள் தொலைபேசி எண், முகவரி போன்றவற்றை கொடுத்துச் செல்லவேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த இரவு 11 மணி ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படுகிறது.
பொது நிகழ்ச்சிகளில், முன்பு கட்டிடங்களுக்குள் 50 பேருக்கும், வெளியிடங்களில் 100 பேருக்கும் அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கட்டிடங்களுக்குள் 100 பேருக்கும், திறந்த வெளி நிகழ்ச்சிகளில் 300 பேருக்கும் அனுமதியளிக்கப்படுகிறது. தனியார் நிகழ்ச்சிகளில், முன்பு கட்டிடங்களுக்குள் 10 பேருக்கும் வெளியிடங்களில் 15 பேருக்கும் அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது முறையே 30, 50 என உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன், சுவிட்சர்லாந்து அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்டவர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு தனிமைப்படுத்தலிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
அவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவோ, தங்கள் தொலைபேசி எண் மற்றும் முகவரியை எல்லையில் கொடுக்கவோ அவசியம் இல்லை. 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் இந்த விதிவிலக்கு பொருந்தும்.
அத்துடன், கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களுக்கும் இந்த விதிவிலக்கு பொருந்தும்.
அதே நேரத்தில், திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பிரச்சினை உள்ள
நாடுகளிலிருந்து வருவோருக்கு இந்த விதிவிலக்குகள் பொருந்தாது என்பது
குறிப்பிடத்தக்கது.