ஜேர்மனியில் முடிவுக்கு வந்துள்ள முக்கிய கொரோனா விதி
ஜேர்மனியில் இனி கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கும் உணவகங்கள் முதலான இடங்களுக்குச் செல்ல அனுமதி உண்டு. ஜேர்மனி நேற்று தனது இரண்டாம் கட்ட கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தல் திட்டத்தைத் துவங்கியுள்ளது.
அதன்படி, இனி தடுப்பூசி பெறாதவர்களும் உணவகங்கள், காபி ஷாப்கள் முதலான இடங்களுக்குச் செல்லலாம்.
Omicron வகை கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து டிசம்பர் மாதம், தடுப்பூசி பெறாதோர் உணவகங்கள் முதலான இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி பெற்றவர்களுக்கும், கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டவர்களுக்கும் மட்டுமே அத்தகைய இடங்களில் அனுமதி என்பதைக் கூறும் 2G விதிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்நிலையில், மார்ச் மாதம் 4ஆம் திகதி முதல், அதாவது நேற்று முதல், கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள் கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் ஆதாரம் வைத்திருந்தால், அவர்களுக்கு உணவகங்கள் முதலான இடங்களுக்குச் செல்ல அனுமதியளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 3G விதிகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன எனலாம்.
இரவு விடுதிகள் மற்றும் நடன விடுதிகளும் 2G பிளஸ் விதிகளைப் பின்பற்றி வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளன.
அதாவது, கொரோனா தடுப்பூசி பெற்றவர்களும், கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டவர்களும் கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என நிரூபித்தாலோ அல்லது பூஸ்டர் டோஸ் பெற்றுக்கொண்டிருந்தாலோ, அவர்களும் நடன விடுதிகளுக்குச் செல்லலாம்.
ஆனால், பெர்லினில் மட்டும் பூஸ்டர் டோஸ் பெற்றவர்களும் கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என நிரூபிக்கவேண்டும் என்ற விதி உள்ளது.
மேலும், மார்ச் 4 முதல், உள் அரங்குகளில் 60 சதவிகிதம் அளவுக்கு, அதாவது, 6,000 பேர் வரை அனுமதிக்கப்படலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
திறந்தவெளி மைதானங்களைப் பொருத்தவரை, மைதானத்தின் இருக்கைகளில் 75 சதவிகிதம் அளவுக்கு, அதாவது, 25,000 பேர் வரை அனுமதிக்கப்படலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போதைக்கு, இந்த புதிய விதிகள் சுமார் இரண்டு வாரங்கள் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 19 அன்று, கொரோனா கட்டுப்பாடுகளுக்கு அடிப்படையான, தொற்று பாதுகாப்புச் சட்டம் (Infection Protection Act) காலாவதியாகிறது.
கொரோனா சூழல் மேம்படும் நிலையில், அதாவது எதிர்பார்த்தபடி கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் நிலையில், மார்ச் 20 முதல் பெரும்பாலான கொரோனா விதிகள் விலக்கிக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.