பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது ஆபத்தானது! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், எதிர்வரும் திங்கள் கிழமை முதல் பாடசாலைகளுக்கு மாணவர்களை வரவழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறித்து விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுகாதார துறையினரும் எச்சரிக்கைகளை விடுத்துள்ள சூழ்நிலையில் அரசாங்கம் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாடசாலைகளுக்கு புதிய தனிமைப்படுத்த வழிக்காட்டல்கள் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்ட போதிலும் இதுவரை இந்த விடயம் தொடர்பில் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனவரி 3 ஆம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களையும் மீண்டும் சேவைக்கு அழைத்த அரசாங்கம் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் பாடசாலைகளை திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஒமிக்ரோன் வைரஸ் திரிபு உட்பட கொரோனா திரிபுகள் பரவி வருவதாக சுகாதார துறையினர் எச்சரித்திருக்கும் பின்னணியில், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
கொரோனா பரவலுக்கு முன்னர் பாடசாலைகளில் ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும் என வரையறை இருந்தது. எனினும் கொரோனாவுக்கு பின்னர், இந்த வரையறையை அரசாங்கம் 45 ஆக அதிகரித்தது.
இதனால், வகுப்புகளில் சமூக இடைவெளியை போன முடியாத நிலைமை காணப்படுகிறது. பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஒரு வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்கள் இரண்டாக பிரித்து பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டனர்.
எனினும் தற்போது அனைத்து மாணவர்களும் பாடசாலைகளுக்கு அழைக்கப்படடுள்ளதால், சமூக இடைவெளியை பேண முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஏற்கனவே இலங்கையின் அயல் நாடான இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகள் மற்றும் முடக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில், நாட்டில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சமூக இடைவெளி உட்பட தனிமைப்படுத்தல் வழிமுறைகள் சீர்குலைந்து காணப்படும் சூழலில் பாடசாலை மாணவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் வகுப்புகளுக்கு அழைப்பது ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும் என சுகாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.