ஜேர்மன் அகதிகள் முகாம் ஒன்றில் கொரோனா பரவல்: காலதாமதமாக பரிசோதனை செய்ததாக குற்றச்சாட்டு
ஜேர்மனியிலுள்ள அகதிகள் முகாம் ஒன்றில் பலருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதைத் தொடர்ந்து, காலதாமதமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக அரசியல்வாதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜேர்மனியின் Sankt Augustin என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம் ஒன்றில், சுமார் 70 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அந்த முகாம் அமைந்திருக்கும் காம்பவுண்டில் உள்ள 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், 70 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, அந்த அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் மேலும் 500 புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த செய்தி வெளியானதையடுத்து அரசியல்வாதிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
அகதிகள் முகாம்களில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தோம்.
இப்போது காலதாமதாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்கிறார் பசுமைக் கட்சியைச் சேர்ந்த Horst Becker என்னும் அரசியல்வாதி.
இதுபோக, புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்றும் சில அரசியல்வாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.