பணியிடங்களிலேயே கொரோனா சோதனை! சலுகையை பயன்படுத்திக்கொள்ள பிரித்தானிய மக்களுக்கு அரசு வலியுறுத்தல்
ஊரடங்கின் போது வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்காகவே இப்போது பிரித்தானியாவில் உள்ள அதிகமான நிறுவனங்களுக்கு பணியிட கொரோனா சோதனை வழங்கப்படுவதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
50-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் பணியிடங்களிலேயே இப்போது கொரோனாவுக்கான சோதனையை செய்துகொள்ளலாம். இதன்முலம், அவர்கள் 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் தங்கள் முடிவுகளையம் பெறலாம்.
முன்னதாக 250-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே இதுபோன்று பணியிடங்களிலேயே சோதனை செய்ய அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில், நிறுவனங்களும் ஊழியர்களும் இந்த புதிய சலுகையை பயன்படுத்திக் கொண்டு, வைரஸ் பரவுவதை தடுக்க உதவியாக இருக்குமாறு பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கேட்டுக்கொண்டார்.
மேலும், மூன்று பேரில் ஒருவருக்கு அறிகுறிகள் இல்லாமல் வைரஸ் இருப்பதையும், அதனால் நமக்கே தெரியாமல் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு அனைவரும் சோதனை செய்துகொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.