ஜேர்மனியில் தொடர்ந்து பயங்கரமாக அதிகரிக்கும் கொரோனா... தீவிர சிகிச்சைப்பிரிவு நோயாளிகள் அதிகரிப்பதால் உருவாகியுள்ள அச்சம்
ஜேர்மனியில் தொடர்ந்து கொரோனா தொற்று பயங்கரமாக அதிகரித்துவரும் நிலையில், தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவது அச்சத்தை உருவாக்கியுள்ளது.
நேற்று 24 மணி நேரத்தில், ஜேர்மனியில் புதிதாக 28.037 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இது ஒரு வாரத்துக்கு முந்தைய எண்ணிக்கையைவிட சுமார் 12,000 அதிகமாகும். அத்துடன், கொரோனா பாதிப்பால் 126 பேர் உயிரிழந்துள்ளார்கள். ஜூன் மாதத்திற்குப் பிறகு இத்தனை பேர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஏழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது என்ற எண்ணிக்கையும் நேற்று முன்தினம் 118ஆக இருந்தது, நேற்று 130.2ஆகியுள்ளது. அந்த எண்ணிக்கையும் சென்ற வாரம் 85.6ஆகத்தான் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, மருத்துவத்துறை நிபுணர்கள் மருத்துவமனைகள் அபாயமாக கொள்ளைநோய் சூழலில் இருப்பதாகக் கூறி உடனடியாக மக்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு எச்சரிக்கிறார்கள்.
ஜேர்மன் மருத்துவமனைகளிலுள்ள தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் நேற்று முன்தின (அக்டோபர் 27) நிலவரப்படி, 1,768 கொரோனா நோயாளிகள் கொரோனா காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 918 பேருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி பெறாதவர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இப்படியே போனால், தீவிர சிகிச்சைப்பிரிவுகள் நிரம்பி வழியும் சூழல் உருவாகலாம் என்கிறார்கள் அவர்கள்.