பிரான்சில் வாழும் அனைவருக்கும் கட்டாய கொரோனா தடுப்பூசி?: சட்டத்தில் மாற்றம் கொண்டுவர கோரிக்கை
பிரான்சில் வாழும் அனைவருக்கும் கட்டாய கொரோனா தடுப்பூசி வழங்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
Parti Socialiste (PS) கட்சியைச் சேர்ந்த செனேட்டர்கள், பிரான்சில் வாழும் அனைவருக்கும் கட்டாய கொரோனா தடுப்பூசி வழங்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்கள்.
பிரான்சைப் பொருத்தவரை, சுகாதாரப் பணியாளர்கள் முதலான சில தரப்பினருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 50,673,917 பிரான்ஸ் நாட்டவர்கள் ஏற்கனவே தங்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸையும் பெற்றாயிற்று.
ஆனாலும், மீதமுள்ளவர்களும் கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு ஒரு சட்டம் அவசியம் என செனேட்டர்கள் கருதுகிறார்கள்.
செனேட்டர் Bernard Jomier கூறும்போது, முன்பு சுகாதார பாஸ் மக்களை தடுப்பூசி பெற வைப்பதற்கு செயல்திறன் வாய்ந்ததாக இருந்தது. ஆனால், இப்போது அதன் செயல்திறன் குறைந்துவருகிறது. தடுப்பூசி பெறாதாவர்களைத் தேடிப் போகவேண்டியிருக்கிறது.
ஆகவே, இந்த சட்டம், அனைவரும் தடுப்பூசி பெற்றாகவேண்டும் என மக்களுக்குச் சொல்லும் ஒரு வழியாக இருக்கும். ஏனென்றால், அது ஒரு கடமை என்றார்.
தங்கள் தடுப்பூசியின் முதல் டோஸை பெற அப்பாயிண்ட்மெண்ட் பெறுவோரின் எண்ணிக்கையும் சரிந்துவருகிறது. தடுப்பூசி பிரச்சரம் உச்சத்திலிருந்தபோது பிரான்சில் நாளொன்றிற்கு பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.