தரவுகளை திருத்தினார்கள்: பைசர் தடுப்பூசி மீது கடும் குற்றச்சாட்டு
கொரோனா தடுப்பூசி குறித்த மருத்துவ ஆய்வுகளுக்காக ஃபைசரால் நியமிக்கப்பட்ட ஒரு துணை ஒப்பந்ததாரர் தரவுகளை திருத்தியமைத்து பொதுமக்களின் உயிருடன் விளையாடியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவம் தொடர்பான சிறப்பு இதழ் ஒன்றில் குறித்த குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த இதழில் வென்டாவியா நிறுவனத்தின் முன்னாள் பணியாளரை மேற்கோள் காட்டி பைசர் நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
அமெரிக்க மாநிலமான டெக்சாஸைச் சேர்ந்த நிறுவனமான வென்டாவியா, பைசர் நிறுவனத்தால் கொரோனா தடுப்பூசி குறித்த மருத்துவ ஆய்வுகளுக்காக நியமிக்கப்பட்ட துணை ஒப்பந்ததாரர் ஆவார்.
இவர்களே தடுப்பூசி பற்றிய ஆய்வுகளில் தரவுகளை திருத்தியதாகக் கூறப்படுகிறது. மட்டுமின்றி பக்கவிளைவுகள் தொடர்பான உண்மைகளை மறைத்ததாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
வென்டாவியா நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான புரூக் ஜாக்சன் என்பவரே, தற்போது அந்த நிறுவனத்தின் மக்கள் விரோத செயலை அம்பலப்படுத்தியுள்ளார்.
அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் முன்னர், 2 வார காலம் கொரோனா தடுப்பூசி தொடர்பான மருத்துவ ஆய்வுகளில் புரூக் ஜாக்சன் உட்பட்டிருந்தார்.
வென்டாவியா நிறுவனம் கொரோனா தடுப்பூசி தொடர்பில் பல முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது குறித்து அமெரிக்க FDA அமைப்பிடம் புகார் அளித்துள்ளதாகவும் புரூக் ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் FDA தகவல் தெரிவிக்க மறுத்துள்ளது. மேலும், பைசர் தடுப்பூசிக்கு அனுமதிக்காக சம்ர்ப்பிக்கப்பட்ட தரவுகளில் தங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாகவும் FDA குறிப்பிட்டுள்ளது.
வென்டாவியா நிறுவனத்தை பொறுத்தமட்டில், பைசர் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுமா என்பதை மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தியது.
உலகம் முழுவதும் 44,000 பேர்கள் இச்சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.