பிரான்சில் மின்னல் வேகத்தில் பரவும் ஆபத்து! ஒரு நொடிக்கு 2 பேருக்கு கொரோனா.. அச்சத்தில் ஐரோப்பா
பிரான்ஸ் நாட்டில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா பாதிப்பு குறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சர் சில அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா மீண்டும் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இதற்கிடையில் கொரோனாவில் இருந்து புதிதாக உருமாறிய Omicron மாறுபாடும் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை மட்டும் 2.08 லட்சம் பேருக்கு Omicron பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனா வைரஸ் சுனாமி போல பரவி வருவதாக கூறப்படுகின்றது.
இந்த பரவல் குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் Olivier Veran கூறியதாவது, கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதுவரை நாங்கள் இப்படி ஒரு பாதிப்பை கண்டதில்லை.
இதைப் பார்க்கும் போது தலையே சுற்றுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் பிரான்ஸ் தினசரி கொரோனா பாதிப்பு 2.50 லட்சமாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை சமயத்தில் பொதுமக்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் வெளியே சுற்றுவது வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் மருத்துவமனைகளில் இப்போது இருக்கும் நிலைமையைப் பார்த்தால் அச்சமாக உள்ளது. இப்போது நமக்கு Omicron மற்றும் டெல்டா என இரண்டு எதிரிகள் உள்ளன. இவை இரண்டும் பல அலைகள் ஒன்றிணைந்து ஒரு மிகப்பெரிய கொரோனா அலையை ஏற்படுத்துகிறது.
பிரான்ஸ் நாட்டில் இப்போது ஒவ்வொரு நொடிக்கும் 2 பேருக்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதாக அவர் தெரிவித்துள்ளார்.