பிரான்சில் புதிய உச்சம் தொட்ட கொரோனா! ஒரே நாளில் 3.5 லட்சத்தை தாண்டிய பாதிப்பு
பிரான்சில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிரான்சில் கடந்த மாதத்தில் இருந்து மீண்டும் மெல்ல மெல்ல தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதற்கிடையில் கொரோனாவில் இருந்து புதிதாக உருமாறிய Omicron மாறுபாடும் அதிகரித்து வருகின்றது.
இரண்டு வைரஸிற்கு நடுவில் சிக்கி கொண்டு மக்கள் போராடி வருகின்றனர். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க இந்த Omicron திரிபு தான் காரணம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. அந்த வகையில் பிரான்ஸ் நாடு கொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் உள்ளன.
இந்நிலையில் பிரான்சில் கடந்த 5ஆம் திகதி 3.68 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1.25 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.26 லட்சத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.