தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி - பின்னணியில் கார்பரேட் நிறுவனம்
தவெக ஆட்சியை கவிழ்க்க கார்பரேட் நிறுவனம் மூலம் ரூ.180 கோடியில் சதி நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக IDPS என்ற கருத்துக்கணிப்பு நிறுவன நிறுவனர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 8 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த விவகாரம் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும், அதற்கு சன்மானமாக ரூ.35 கோடி வரை தருவதாகவும், இதனை வெளியில் கூறினால் அவரது குடும்பத்தினரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டப்பட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இதில் கைது செய்யப்பட்டவர்களை சந்தித்து பேசியதாகவும் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலே இது நடந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அசோக்குமார் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
பின்னணியில் கார்பரேட்
இதனையடுத்து, தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி திரட்டப்பட்டதாகவும் இதற்கு பின்னணியில் கார்பரேட் நிறுவனம் இருந்ததாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் ஒரு வாரமாக தங்கி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
கார்பரேட் நிறுவனம் ஒன்று அவர்களுக்கு தங்க வசதி செய்து கொடுத்துள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் மூலம் பேரத்திற்கு மடியும் எம்.எல்.ஏக்களுக்கு வழங்க முதற்கட்டமாக ரூ.180 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் வெளியில் கசிந்ததால் அறையை காலி செய்து விட்டு தப்பிய நிலையில், காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விரைவில் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி காவல்துறை விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |