இருமலால் 5 வருடங்கள் அவஸ்தைப்பட்ட சிறுவன்: சோதனையில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சாப்பிடும் போதும் நீர் பருகும் போதும் மட்டும் இருமல் காணப்படுவதால், கண்டிப்பாக இது ஆஸ்துமா அல்ல
ஒருகட்டத்தில் மூச்சுவிடவும் சிரமப்பட, மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர் பெற்றோர்
அவுஸ்திரேலியாவில் இருமலால் அவதிப்பட்டுவந்த 8 வயது சிறுவனுக்கு ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை எனக் கூறி சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அடிலெய்ட் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவனான Marley Enjakovic சுமார் 5 ஆண்டுகளாக இருமலால் அவதிப்பட்டு வந்துள்ளான். கடந்த டிசம்பர் மாதம் சிறுவனுக்கு இருமல் கடுமையாகவே, ஒருகட்டத்தில் மூச்சுவிடவும் சிரமப்பட, மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர் பெற்றோர்.
இதனையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சோதனை முன்னெடுக்கப்பட்டதில், சிறுவனில் தொண்டையில் பிளாஸ்டிக் பூ ஒன்று சிக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுவன் சாப்பிடும் போது மட்டுமே இருமத் தொடங்குவதாக குறிப்பிட்டுள்ள தாயார், ஆனால் அதன் பின்னர் மணிக்கணக்கில் இருமலால் அவதிப்படுவான் என தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, மூச்சுவிட முடியாமல் அவதிப்படுவதால் அவனுக்கு மிகவும் பிடித்தமான கால்பந்து விளையாட்டிலும் பயிற்சி எடுக்க முடியாமல் போயுள்ளது என்றார். ஆனால் முதலில் பரிசோதித்த மருத்துவர்கள், இது ஆஸ்துமா என குறிப்பிட்டுள்ளனர்.
சாப்பிடும் போதும் நீர் பருகும் போதும் மட்டும் இருமல் காணப்படுவதால், கண்டிப்பாக இது ஆஸ்துமா அல்ல என்றே சிறுவனின் தாயார் நம்பி வந்துள்ளார். இந்த நிலையில், மருத்துவர்களால் சிறுவனின் தொண்டையில் பிளாஸ்டிக் பூ சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது.
இது தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றாலும், தற்போது நிம்மதியாக உள்ளது என்றார்.
தமது மகனுக்கு என்ன ஆனது என இத்தனை ஆண்டுகளாக கவலைப்பட்டு வந்ததாகவும், ஆனால் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.