இன்னும் 3 வாரத்தில்.... சுவிஸில் கொரோனா ஐந்தாவது அலை
சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி சதவீதம் மிகவும் மந்தமாக உயர்வதும், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதும் நிபுணர்களை அச்சமடைய வைத்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகிறது. சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில். செவ்வாய்க்கிழமை மட்டும் 2,986 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதே நிலை நீடிக்கும் எனில், ஒரு மாதத்தில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 12,000 புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்படலாம் என்கிறார்கள். அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிக்கையானது சூரிச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் ஃபெர் (Jan Fehr) போன்ற சுகாதார நிபுணர்களை கலக்கமடையச் செய்துள்ளது.
நாம் கொரோனா ஐந்தாவது அலையை நோக்கி நகர்கிறோம் என்கிறார் அவர். ஆனால் அவ்வாறு ஐந்தாவது அலை ஏற்படும் எனில், இதன் தாக்கம் எவ்வளவு அதிகமாக இருக்கும் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படுபவர் சதவீதம் எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியும் பீதியை ஏற்படுத்துகிறது என்கிறார் அவர்.
கொரோனா பரவல் தொடர்பில் கூடுதல் நடவடிக்கைகள் ஏதும் இல்லாமல் நாம் குளிர்காலத்தை கடந்து செல்வது சாத்தியமில்லை என்கிறார் ஜான் ஃபெர்.
தடுப்பூசி விகிதம் அதிகரிக்காதவரையில் கொரோனா பாதிப்பு கட்டாயம் கட்டுக்குள் வராது என தெரிவித்துள்ளார் அவர். பல ஐரோப்பிய நாடுகள் ஐந்தாவது அலையில் சிக்க நேர்வது போல சுவிட்சர்லாந்தும் அதே பாதையில் செல்வதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
மொத்தமுள்ள மக்கள்தொகையில் 66.3% மக்கள் மட்டுமே குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.