சுவிட்சர்லாந்திலும் 2G கொரோனா விதிகள் அறிமுகம்?: 2G விதிகள் என்றால் என்ன தெரியுமா?
சுவிட்சர்லாந்தின் அருகிலுள்ள ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகள் 2G கொரோனா விதிகளை அறிமுகம் செய்துள்ள நிலையில், அந்த விதிகள் சுவிட்சர்லாந்திலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரி, இந்த 2G கொரோனா விதிகள் என்றால் என்ன?
ஜேர்மன் மொழியில் Geimpfte என்பதற்கு ‘vaccinated persons’ , அதாவது தடுப்பூசி பெற்றவர்கள் என்றும், Genesene என்பதற்கு ‘recovered persons’, அதாவது கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் என்றும் பொருள் ஆகும். இந்த சொற்கள் இரண்டும் G என்ற ஆங்கில எழுத்தில் துவங்குவதால், இந்த விதிகள் 2G கொரோனா விதிகள் என அழைக்கப்படுகின்றன. அதாவது, உணவகங்கள், மதுபான விடுதிகள் முதல், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள் வரையிலான மூடிய கட்டிடங்களுக்குள் தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பது 2G கொரோனா விதிகளின் பொருள்.
இன்னும் கூடுதலாக சொன்னால், கொரோனா பரிசோதனை செய்து தனக்கு கொரோனா இல்லை என்று காட்டினால் கூட போதாது, தான் தடுப்பூசி பெற்றவர் அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டவர் என ஒருவர் நிரூபித்தால் மட்டுமே, இதுபோன்ற இடங்களுக்குள் நுழைய அவர் அனுமதிக்கப்படுவார்.
ஆஸ்திரியா இந்த 2G கொரோனா விதிகளை அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து, அங்கு தடுப்பூசி பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் சுகாதாரத்துறை நிபுணர்கள், சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கிறார்கள். டிசினோ மாகாண வைராலஜி துறை நிபுணரான Andreas Cernyம், பேசல் மாகாண மருத்துவரான Thomas Steffenம், அதற்காக முன்கூட்டியே நடவடிக்கை ஏதாவது எடுக்கப்படவேண்டும் என்கிறார்கள்.
எளிதில் பாதிக்கப்படும் அபாயத்திலுள்ளோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் அளிக்கப்படவேண்டும் என்றும், இளைஞர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவேண்டும் என்றும் கூறும் பேசல் மாகாண மருத்துவரான Thomas Steffen, இன்னொரு பொதுமுடக்கத்தைத் தவிர்ப்பதற்கு, 2G கொரோனா விதிகளை அறிமுகம் செய்வது ஒரு நல்ல வழி என தான் கருதுவதாக தெரிவிக்கிறார்.