6 பேர் காரணம்! தற்கொலைக்கு முன் தம்பதி எழுதிய கடிதம்... லொட்டரியில் பல கோடி பரிசு கிடைத்தும் சோகம்
தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையால் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லொட்டரியில் விழுந்த பரிசு
சேலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (66). இவருடைய மனைவி சாந்தி (56). இவர்களுக்கு ராம கவுண்டர், ராமவேல் ஆகிய இரு மகன்களும், தமிழரசி என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.
2000ம் ஆண்டில் ராஜேந்திரன் உள்பட 9 பேர் கூட்டாக சேர்ந்து வாங்கிய லொட்டரி டிக்கெட்டில் 7 கோடி ரூபாய் பரிசு விழுந்தது. அதில், ராஜேந்திரனின் பங்காக ஒரு கோடி ரூபாய் கிடைத்தது. அந்தப் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ராஜேந்திரன் - சாந்தி வாயில் நுரை தள்ளியப்படி இறந்து கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் இரு சடலங்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ராஜேந்திரன் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்றுள்ளார்.
கந்து வட்டி கொடுமையால் தற்கொலை
அதை திருப்பிச் செலுத்த முடியாததால் அதே பகுதியைச் சேர்ந்த நடேசன் என்பவரிடம் கடந்த 2018ம் ஆண்டு 19 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். அந்தப் பணத்தைக் கொண்டு வங்கி கடன் நிலுவையை செலுத்திய ராஜேந்திரன், வங்கியில் இருந்து வீட்டு பத்திரத்தையும் மீட்டுக் கொண்டு வந்துள்ளார். அந்தப் பத்திரத்தை நடேசனிடம் வாங்கிய கடனுக்கு அடமானமாக கொடுத்துள்ளார்.
அசலாக 19 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துவிட்டு அதற்கு 21 லட்சம் ரூபாய் வட்டியுடன் மொத்தம் 40 லட்சம் ரூபாய் கேட்டு கந்துவட்டிக்காரர்கள் மிரட்டி வந்துள்ளனர். இதனால் ராஜேந்திரன், சாந்தி ஆகியோர் மனம் உடைந்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.
தம்பதி எழுதியிருந்த கடிதத்தில், எங்கள் சாவுக்கு நடேசன், அவருடைய மகன்கள், மகள், மருமகன் உள்ளிட்ட 6 பேரும் தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து நடேசன், உலகநாதன் ஆகிய இருவரை கைது செய்த பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.