குழந்தையை தத்தெடுப்பதற்காக இந்தியா சென்ற கனேடிய தம்பதி... நாடு திரும்ப முடியாமல் தவிப்பு
நான்கு ஆண்டுகளாக குழந்தை ஒன்றைத் தத்தெடுப்பதற்காக போராடி வரும் ஒரு தம்பதியர், அது தொடர்பாக இந்தியா சென்ற நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கனடா திரும்ப முடியாமல் தவித்துவருகிறார்கள்.
ரொரன்றோவைச் சேர்ந்த ஹரி கோபால் கார்கும் (Hari Gopal Garg) அவரது மனைவி கோமல் கார்கும் (Komal Garg) 14 மாதக் குழந்தை ஒன்றை தத்தெடுப்பதற்காக மார்ச் மாதம் இந்தியா சென்றார்கள்.
அவர்கள் மீண்டும் கனடாவுக்கு விமானம் ஏற இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, இந்தியாவிலிருந்து கனடா வரும் விமானங்களுக்கு தடை விதித்தது கனடா.
கனடா அதிகாரிகளிடம் இது தொடர்பாக தகவல் கேட்டால், பதிலுக்கு தானியங்கி மின்னஞ்சல்கள் மட்டுமே அனுப்பப்படுகின்றன. மறு அறிவிப்பு வரும் வரை கனேடியர்கள் அத்தியாவசியமற்ற பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு கூறியுள்ளது கனடா அரசு.
ஆனால், ஹரி கோமல் தம்பதியைப் பொருத்தவரை, நான்கு ஆண்டு காலமாக குழந்தை ஒன்றைத் தத்தெடுக்கப் போராடி வரும் நிலையில், இந்தியாவில் ஒரு குழந்தை தத்துக் கொடுக்கப்படத் தயாராக இருப்பதாக தகவல் கிடைக்க, உடனே இந்தியாவுக்கு செல்வது அவர்களுக்கு உண்மையிலேயே மிகவும் அத்தியாவசியமான விடயம்தான்.
அதன்படி தம்பதியர் குழந்தையை தத்தெடுப்பதற்காக இந்தியா சென்றபோதுதான், கொரோனா கட்டுப்பாடுகள் வடிவில் வந்தது பிரச்சினை. ஆம், பெட்டி படுக்கையுடன் கனடா புறப்படத் தயாராக இருந்த நிலையில் பயணத்தடை குறித்த தகவல் கிடைத்தது.
அவர்கள் கனேடியர்களை பாதுகாப்பதற்காகத்தான் விமானங்களை தடை செய்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால், நாங்களும் கனேடியர்கள்தானே, எங்களை இந்த சூழ்நிலையிலிருந்து பாதுகாப்பது யார் என்கிறார் ஹரி.