போருக்குத் தப்பி கனடாவுக்கு பயணிக்க முயன்ற தம்பதி... வேறொரு நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டதால் கடும் அதிர்ச்சி
உக்ரைனிலிருந்து போருக்குத் தப்பி கனடாவுக்கு வர முயன்ற முதிய தம்பதியர், இஸ்தான்புல்லுக்கு நாடுகடத்தப்பட்டதால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Oksana Korolova மற்றும் அவரது கணவரான Leonid Korolev ஆகிய இருவரும் உக்ரைனிலிருந்து தப்பி கனடாவுக்கு வருவதற்காக கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸை வந்தடைந்துள்ளார்கள். திங்கட்கிழமை அவர்கள் கனடா வந்தடைந்திருக்கவேண்டும். ரொரன்றோவில், உக்ரைன் அகதிகளுக்கு உதவும் தொண்டு நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த தன்னார்வலர்களும், தம்பதியரின் மகனான Max Korolovaவும், Oksana, Leonid தம்பதியருக்காக காத்திருக்க, அவர்களோ கனடா வந்து சேரவில்லை.
பிறகு அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டபோதுதான் அந்த அதிரவைக்கும் செய்தி தெரியவந்தது. ஆம், Oksana, Leonid தம்பதியர் கிரீஸ் நாட்டிலிருந்து இஸ்தான்புல் நகருக்கு நாடுகடத்தப்பட்டிருந்தார்கள்.
நடந்தது என்னவென்றால், தம்பதியர் கனடா செல்லும் Air Transat நிறுவன விமானம் ஒன்றில் ஏற முயல, அந்த விமான ஊழியர்கள் Leonidஐ விமானத்தில் ஏற்ற மறுத்திருக்கிறார்கள். காரணம், அவர் ரஷ்ய பாஸ்போர்ட் வைத்திருக்கிறார், அவர் கனேடிய தடுப்பூசி தேவைகளை சந்திக்கவும் இல்லை. ஆகவே, Leonid விமானத்தில் ஏற விமான ஊழியர்கள் மறுப்பு தெரிவிக்க, கணவரை விட்டு விட்டு, தான் மட்டும் பயணிக்க விரும்பாத Oksanaவும் விமானத்தில் ஏறவில்லை.
Submitted by Sanja Dommeier
ஆனால், உக்ரைன் அகதிகளை கனடாவுக்கு வர அனுமதிப்பதற்காக, கனேடிய புலம்பெயர்தல் அமைப்பு அவர்களுக்கு தடுப்பூசியிலிருந்து விலக்கும் அளித்து, கனடா வர விசாவும் வழங்கியுள்ளது. உக்ரைன் அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சலுகைகள் குறித்து சரிவர தெரியாத Transat நிறுவன விமான ஊழியர்கள், தம்பதியரை விமானத்தில் ஏற விடாமல் தடுக்க, ஏதென்ஸ் நகர அதிகாரிகளோ, தம்பதியர் இதற்கு முன் விமானம் ஏறிய நகரமான இஸ்தான்புல்லுக்கே அவர்களை நாடுகடத்தியுள்ளார்கள்.
நாடுகடத்தப்பட்டதால் தம்பதியர் அதிர்ச்சியடைய, தன் பெற்றோர் நாடு கடத்தப்பட்டதையறிந்து அவர்கள் மகனான Max மன அழுத்தத்துக்கு ஆளாக, சர்வ குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், விமான நிறுவனம் நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
ஆனால், அந்த வருத்தத்தால் எந்த பயனும் இல்லை. காரணம், ஏதென்ஸ் நகரிலிருந்து Oksana, Leonid தம்பதியர் நாடுகடத்தப்பட்டதால், அடுத்த ஆறு மாதங்களுக்கு அவர்கள் ஏதென்ஸுக்குள் கால் வைக்க முடியாது.
ஆக, இனி Oksana, Leonid தம்பதியர் கனடா வரவேண்டுமானால், அவர்கள் இஸ்தான்புல்லிலிருந்து நேரடியாக ரொரன்றோ வரும் விமானத்தில்தான் வர முடியும். தற்போது, அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.