லொட்டரியில் பரிசு விழுந்ததும் ஆடம்பரமாக செலவு செய்பவர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான தம்பதி
லொட்டரியில் பரிசு விழுந்ததுமே சிலர் மொத்தமாக மாறிப்போவார்கள். ஆடம்பரப்பொருட்கள் வாங்குவதும் உலகம் சுற்றுவதுமாக பணத்தை செலவு செய்வார்கள்.
பணம் வந்ததும், துணையைக் கழற்றிவிட்டவர்களும் உண்டு.
ஆனால், கோடிக்கணக்கில் லொட்டரியில் பரிசு கிடைத்தும், ஆடம்பரமாக செலவு செய்யாமல், தங்கள் வாழ்வை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள் ஒரு பிரித்தானிய தம்பதியர்!
லொட்டரியில் கிடைத்த கோடிக்கணக்கான பணம்
இங்கிலாந்திலுள்ள Wakefieldஇல் வாழ்ந்துவரும் அமன்டா, கிரஹாம் (Amanda, Graham Nield) தம்பதியருக்கு 2013ஆம் ஆண்டு லொட்டரியில் 6.6 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்தது.
இலங்கை மதிப்பில் அது 2,44,48,51,200.00 ரூபாய் ஆகும்.
இப்படி கோடிக்கணக்கில் லொட்டரியில் பரிசு விழுந்ததும், தம்பதியர் ஒரு Nissan Pathfinder கார் வாங்கியதும், அமன்டா தன் தோழிகளுடன் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றதும் உண்மைதான்.
ஆனாலும், அதைத் தொடர்ந்து அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவும் கவனமாக எடுக்கப்பட்ட முடிவாகவும், நல்ல முடிவுகளாகவும் இருந்தது.
என்ன செலவு செய்தார்கள்?
அமன்டாவின் பெற்றோர் உடல் நலமில்லாமல் இருந்துள்ளார்கள். ஆகவே, தங்களுக்கு ஒரு வீடு கட்டும்போது, தங்கள் பெற்றோரை அருகிலேயே வைத்து கவனித்துக்கொள்வதற்காக, பெற்றோரின் மருத்துவ வசதிகளுக்காக ஒரு வீட்டையும் சேர்த்தே கட்டியுள்ளார்கள் தம்பதியர்.
லொட்டரியில் பரிசு விழுந்தால், பாரீஸுக்கு ஷாப்பிங் செல்லவேண்டும், அழகான வீடுகளையும் கார்களையும் பார்க்கும்போது, நமக்கு லொட்டரியில் பரிசு விழுந்தால், இவற்றையெல்லாம் வாங்கவேண்டும் என்று நான் என் கணவரிடம் சொல்வேன் என்கிறார் அமன்டா.
ஆனால், உண்மையிலேயே பரிசு விழுந்ததும், எனக்கு அவைகள் மீதான ஆர்வம் போய்விட்டது. அது ஏன் என்று தெரியவில்லை என்கிறார் அவர்.
லொட்டரியில் பரிசு விழுந்தாலும், எங்கள் வாழ்க்கைமுறை மாறவில்லை என்கிறார் அமன்டா.
பொதுவாக ஆண்டுதோறும் நாங்கள் செல்லும் சைப்ரஸ் தீவு சுற்றுலா எப்போதும் போல தொடர்கிறது, அவ்வளவுதான் என்கிறார் அவர்.
சொல்லப்போனால், இப்போது தாங்கள் வாழும் வீடு ஐந்து படுக்கையறைகள் கொண்டது. மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடே போதும் என்று நினைக்கிறேன் என்கிறார் அமன்டா.
தம்பதியருக்கு 18 பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். தாங்கள் பணக்காரர்கள், என்ன நினைத்தாலும் வாங்கமுடியும் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள் தம்பதியர்.
அவர்களை அவ்வப்போது ஷாப்பிங் அழைத்துச் செல்கிறார்கள். வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பேரப்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் சின்ன பரிசுத்தொகையில் இப்போது 10 பவுண்டுகள் அதிகரித்துள்ளன, அவ்வளவுதான்.
தம்பதியருக்கு கிடைத்த மருமகள்களோ, மாமியாரையே மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறது.
பிள்ளைகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பொருட்கள் வாங்கிக் கொடுப்பது எங்கள் வேலை, அது உங்கள் வேலை அல்ல என்கிறாராம் ஒரு மருமகள்.
ஆக, உண்மையாகவே வித்தியாசமான குடும்பமாகத்தான் இருக்கிறது அமன்டா குடும்பம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |