இரண்டு வயது அமெரிக்கக் குழந்தையை நாடுகடத்தியதா ட்ரம்ப் நிர்வாகம்? நீதிபதி கவலை
ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்கக் குடிமகளான இரண்டு வயது பெண் குழந்தையை நாடுகடத்தியதாக வெளியாகியுள்ள விடயம் தொடர்பில் ஃபெடரல் நீதிபதி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
குழந்தையை நாடுகடத்திய ட்ரம்ப் நிர்வாகம்
பாதுகாப்பு கருதி, ’VML’ என அழைக்கப்படும் இரண்டு வயது பெண் குழந்தை, ஹோண்டுராஸ் நாட்டுக்கு நடுகடத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அமெரிக்காவில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
அந்தக் குழந்தையை தன்னுடன் வைத்துக்கொள்ள அவளது தந்தை அவசரமாக எடுத்த முயற்சிகளையும் மீறி அந்தக் குழந்தை நாடுகடத்தப்பட்டுள்ளது.
குழந்தையின் தந்தை அவளது எதிர்காலம் குறித்து தன் மனைவியிடம் தொலைபேசி மூலம் பேச முயல, அதற்கும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டுள்ள குழந்தையை விடுவிக்கக்கோரி சட்டத்தரணிகள் வியாழக்கிழமையன்று நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
ஃபெடரல் நீதிபதியான டெர்ரி (US District Judge Terry Doughty) என்பவர், வெள்ளிக்கிழமையன்று அது குறித்து விசாரிக்க அந்தக் குழந்தையின் தாயை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றுளளார், ஆனால், அவரால் அந்தப் பெண்ணை தொடர்புகொள்ள முடியவில்லை.
பின்னர், வெள்ளிக்கிழமை மாலை ட்ரம்ப் நிர்வாகத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் நீதிபதியை அழைத்துள்ளார்கள்.
அந்தக் குழந்தையின் தாயை அழைக்க இயலாது, ஏனென்றால், அவர் ஹோண்டுராஸ் நாட்டைச் சென்றடைந்துவிட்டார் என அவர்கள் நீதிபதியிடம் கூறியுள்ளார்கள்.
நடந்தது என்ன?
அதாவது, ட்ரம்ப் நிர்வாகம் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவரும் நிலையில், செவ்வாயன்று New Orleans பகுதியில் புலம்பெயர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளார்கள்.
New Orleans பகுதியில் வாழ்ந்துவந்த குழந்தை VMLஇன் தாய் ஹோண்டூராஸ் நாட்டைச் சேர்ந்தவர். ஆகவே, அவரையும் அவரது பிள்ளைகளையும் தடுப்புக்காவலில் அடைத்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், குழந்தை VML அமெரிக்காவின் New Orleansஇல் பிறந்தவள். அவள் ஒரு அமெரிக்கக் குடிமகள்.
ஆக, அமெரிக்கக் குடிமகளான VMLஐயும் அதிகாரிகள் ஹோண்டூராஸ் நாட்டுக்கு நாடுகடத்தியதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
VMLஇன் தாய் தன் குழந்தையை தன்னுடன் ஹோண்டூராஸ் நாட்டுக்கு கொண்டு செல்ல விரும்பியதாலேயே குழந்தையை அவருடன் அனுப்பியதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஆனால், அந்த விடயம் நீதிமன்றத்துக்குத் தெரியாதே என்று கூறியுள்ள நீதிபதி டெர்ரி, அமெரிக்காவில் பிறந்த குழந்தை VMLஐ அமெரிக்க அரசு சட்டவிரோதமாக நாடுகடத்தியதா என்பதை தீர்மானிப்பதற்காக மே மாதம் 16ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |