பிரிந்த பெற்றோர்... 13 வயது சிறுமியின் முடிவைக் கேட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த ஒரு தம்பதியர் விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், அவர்களில் யாருடன் வாழ்வது என அவர்களுடைய மகளான 13 வயது சிறுமி எடுத்த முடிவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பிரிந்த பெற்றோர்...
மொரீஷியஸ் நாட்டவரான பெண்ணொருவரை 2005ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார் ஒருவர்.
2008ஆம் ஆண்டு, தம்பதியர் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்கு இருவரும் பணி புரிந்துவந்த நிலையில், 2012ஆம் ஆண்டு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

2015வாக்கில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் உருவாக, 2016ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள நீதிமன்றம் ஒன்றை அணுகிய அந்த தந்தை, தன் பிள்ளையை அவளுடைய தாய் தன்னிடமிருந்து பிரித்துவிடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளார்.
அதன்படி, ஒவ்வொரு வார இறுதியிலும் அந்தச் சிறுமி தன் தாயுடன் நேரம் செலவிட நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
2017ஆம் ஆண்டு, இந்தியாவிலிருக்கும் சிறுமியின் பாட்டியைப் பார்க்கச் செல்வதற்கு அவளது தயார் விண்ணப்பிக்க, நீதிமன்றமும் அனுமதியளித்துள்ளது.
ஆனால், இந்தியா சென்ற சிறுமியின் தாய், மீண்டும் பிரித்தானியா திரும்பவேயில்லை.
அவர், இந்தியாவில், நீதிமன்றம் ஒன்றில், தன் மகளை தன்னுடன் வாழ அனுமதிக்கக் கோரி விண்ணப்பித்துள்ளார்.
தகவலறிந்த அந்த சிறுமியின் தந்தை, தன் மகளை தன்னுடன் பிரித்தானியாவுக்கு அனுப்பக் கோரியுள்ளார்.
ஆனால், நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது!
நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
நீதிபதிகள், தற்போது 13 வயதாகும் அந்த சிறுமியிடம் தனியாக பேசியுள்ளார்கள். அப்போது, அந்தச் சிறுமி தன் தாயுடன் இந்தியாவில் வாழவே விரும்புவதாக உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

அவளது உறுதியைக் கண்ட நீதிபதிகள், யாருடன் வாழ்வது என முடிவெடுக்கும் அளவுக்கு அந்தச் சிறுமிக்கு முதிர்ச்சி இருப்பதாகவும், அவள் தன் தாயுடன் வாழவே விரும்புவதாகவும், தந்தையுடன் பிரித்தானியா திரும்பும் எண்ணம் அவளுக்கு இல்லை என்றும் கூறி, அவளை அவளது தந்தையுடன் பிரித்தானியாவுக்குச் செல்ல வற்புறுத்த இயலாது என்றும் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அந்தச் சிறுமியின் நலனே முக்கியம் என்று கூறியுள்ள நீதிபதிகள், கடந்த நான்கு ஆண்டுகளாக தன் மகளை சந்திக்க அந்த தந்தை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், ஒரு தந்தையாக அவர் தனது கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்றும் கூறி அந்தச் சிறுமியை அவளது தந்தையுடன் அனுப்ப மறுத்து விட்டனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |