ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி தொடுத்த வழக்கு.., தீர்ப்பளித்த நீதிமன்றம்
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பி, விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜாய் கிரிசில்டா வெளியிட்ட சமூக வலைதள பதிவுகளால் தங்களது நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாக மாதம்பட்டி ரங்கராஜின் தந்தை நடத்தி வரும் மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் குற்றச்சாட்டு முன்வைத்தது.
மேலும், இதனால் ரூ.12 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டதாக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில், கிரிசில்டாவின் சமூக வலைதள பதிவுகளால், ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல் செப்டம்பர் வரை 11 கோடியே 21 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தாகியுள்ளது.
மேலும், சமூக வலைதள பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்த தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இவ்வழக்கில் கிரிசில்டா தரப்பில், சமூக வலைதள பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் குறித்தோ, நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கை குறித்தோ எதையும் பதிவிடவில்லை.
கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தானதற்கும், கிரிசில்டா கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வாதிடப்பட்டது.
பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தடை கோரிய மனு மீதான தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்நிலையில், இவ்வழக்கில் ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |