கனேடிய இலங்கையரான தந்தையிடம் குழந்தைகளை ஒப்படைக்க மறுத்த இந்திய நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
இலங்கை மற்றும் கனேடிய குடியுரிமை கொண்ட ஒரு தந்தை, இந்தியரான தன் மனைவியிடமிருக்கும் தன் குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி தொடர்ந்த வழக்கில், தாய்க்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது இந்திய நீதிமன்றம் ஒன்று.
இலங்கை மற்றும் கனேடிய குடியுரிமை கொண்ட Chandima Wijsinghe (48), இந்தியப் பெண்ணான Sharada Gholapஐ திருமணம் செய்திருந்தார். தம்பதியர் 2010ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்தார்கள். ஆனால், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, தன் மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு இந்தியா திரும்பிவிட்டார் Sharada.
Sharadaவை இலங்கைக்கு அழைக்க Wijsinghe எடுத்த முயற்சிகள் தோல்வியடையவே, இந்தியாவின் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த Wijsinghe, தன் மனைவி சட்ட விரோதமாக தன் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட்டதாகவும், அவர்களை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் கோரியிருந்தார்.
பதில் வழக்கு தொடர்ந்த Sharadaவோ, தான் ஒரு தாயாக தன் பிள்ளைகள் இருவரையும் நன்றாக வளர்த்துவருவதாகவும், தனது மகள் ஒரு அமெரிக்க குடிமகளாக இருக்கும் நிலையிலும் அவளையும் தான் நன்றாக கவனித்துக்கொள்வதாகவும், அவர்களுக்கு நல்ல கல்வி உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்திருப்பதாகவும் கூறி, தாய் என்ற முறையில் அவர்களை தன்னுடன் வைத்திருக்க தனக்கு முழு உரிமை உள்ளது என்றும் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், குழந்தைகள் இருவரையும் தனித்தனியாக சந்தித்துப் பேசினார்கள்.
அந்த குழந்தைகள் இருவருமே தங்கள் தாயுடன் இருக்கவே விருப்பம் தெரிவிக்க, தாய் கூறியது போலவே அவர்களுக்கு நல்ல கல்வி அளிக்கப்படுவதையும், அவர்கள் நல்லொழுக்கத்துடன் வளர்க்கப்படுவதையும் கண்டறிந்துள்ளார்கள் நீதிபதிகள்.
ஆகவே, மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் குழந்தைகளும் இந்தியாவில் வேரூன்றி, உள்ளூர் மொழியை நன்கு கற்று, பள்ளியிலும் நல்ல பெயர் எடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள், குழந்தைகள் நலன் கருதி தற்போதைய சூழலில் அவர்களை அவர்களது தாயிடமிருந்து பிரிப்பது சரியாக இருக்காது என்று கூறி தந்தையின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்கள்.
அதே நேரத்தில், Wijsinghe தன் குழந்தைகளை நேரிலோ, காணொளி வாயிலாகவோ சந்திக்கவும் தடையில்லை என்றும் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்கள் நீதிபதிகள்.