தந்தை பிரித்தானியாவில்... தாய் இந்தியாவில்: குழந்தையின் விருப்பத்தை ஏற்ற நீதிமன்றம்
இந்தியாவில் தன் தாயுடன் வாழ்ந்துவரும் தன் மகனை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, பிரித்தானியாவில் வாழும் இந்தியர் ஒருவர் முன்வைத்த கோரிக்கையை ஏற்க இந்திய நீதிமன்றம் ஒன்று மறுத்துவிட்டது.
தந்தை பிரித்தானியாவில், தாய் இந்தியாவில்
2008ஆம் ஆண்டு இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியர், அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்.
2014ஆம் ஆண்டு தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்துள்ளான். 2019ஆம் ஆண்டு அந்த தந்தைக்கு பிரித்தானியாவில் வேலை கிடைக்க, அந்தக் குடும்பம் பிரித்தானியாவில் குடியமர்ந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தம்பதியருக்குள் கருத்துவேறுபாடு ஏற்படவே, அந்தப் பெண் தன் மகனுடன் தனியாக வாழத்துவங்கியுள்ளார்.
அதைத் தொடர்ந்து தங்களுக்குள்ளான உறவு முறிந்துபோனதாக அந்த பையனின் தந்தை அரசுக்குதெரியப்படுத்த, அவரது விசா ரத்தாக, அந்தப் பெண்ணை பிரித்தானியாவை விட்டு வெளியேறச் சொல்லியுள்ளது பிரித்தானிய உள்துறைச் செயலகம்.
2023ஆம் ஆண்டு ஜூலை மாதம், பிரித்தானியாவிலிருந்து வெளியேறிய அந்தப் பெண், கூடவே தன் மகனையும் அழைத்துக்கொண்டு இந்தியா வந்துவிட்டார்.
அந்த நபர் பிரித்தானிய நீதிமன்றம் ஒன்றை அணுகி, தன் மகனை தன்னிடம் ஒப்படைக்குமாறு தன் மனைவிக்கு உத்தரவிட கோரியுள்ளார்.
இதற்கிடையில், அந்தப் பெண் இந்தியாவில் விவாகரத்து கோரி விண்ணப்பித்ததுடன், தன் மகனை அவனுடைய தந்தை தன்னிடமிருந்து பிரிக்கவிடாமல் செய்யுமாறும் கோரியுள்ளார்.
2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அந்தப் பெண் தன் மகனை அவனுடைய தந்தையிடம் டிசம்பர் 6ஆம் திகதிக்குள் ஒப்படைக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது பிரித்தானிய நீதிமன்றம்.
அதே சமயத்தில், மும்பை உயர்நீதிமன்றத்திடமும், தன் மகனை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி விண்ணப்பித்துள்ளார் அந்தப் பையனின் தந்தை.
நீதிமன்றம் மறுப்பு
ஆனால், அவரது கோரிக்கையை மும்பை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
அந்தப் பெண்ணின் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இப்போது அந்தப் பையனின் தந்தை தன் மகனையும் அவனது தாயையும் பிரித்தானியாவுக்கே திரும்பி வந்துவிடும்படி அழைக்கிறார்.

ஆனால், அவர் தன் மனைவியுடனான உறவு முறிந்துபோனதாக அறிவித்ததால்தான் அந்தப்பெண் பிரித்தானியாவை விட்டு வெளியேற்றப்பட்டார்.
ஆக, அந்தப் பெண்ணுக்கும் அவரது மகனுக்கும் எவ்வித விசா ஏற்பாடு செய்வார் என்பது குறித்து அவர் எந்த உறுதியும் தெரிவிக்கவில்லை. ஆகவே, அந்தப் பையனை பிரித்தானியாவுக்கு அனுப்பக்கூடாது என அந்தப் பெண்ணின் தரப்பு வாதம் முன்வைத்துள்ளது.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட பையனுக்கு இப்போது 12 வயது ஆகிறது. ஆகவே, அவனை அழைத்து அவனது கருத்தை கேட்டுள்ளனர் நீதிபதிகள்.
அவன், தன் தாயுடன் இந்தியாவில் வாழவே விரும்புவதாக தெரிவித்துள்ள நிலையில், அவனது தந்தையின் கோரிக்கையை நிராகரித்துள்ள நீதிமன்றம், அப்படி அந்தப் பையனை பிரித்தானியாவுக்கு அவனுடைய தந்தையுடன் அனுப்பினால், அவனது தாய் தன் மகனை நீண்ட காலம் பார்க்கமுடியாத ஒரு நிலை ஏற்படலாம் என்று கூறியுள்ளனர்.
ஆக, அந்தப் பையனின் விருப்பத்தை கருத்தில்கொண்டு, அவனை பிரித்தானியாவுக்கு அனுப்பக்கோரும் அவனது தந்தையின் கோரிக்கையை ஏற்க இயலாது என மும்பை உயர்நீதிமன்றம் கூறிவிட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |