புலம்பெயர் பெண்ணொருவருக்கு ஆதரவாக ஜேர்மன் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் படைகளுக்கு உதவியாக பணியாற்றிவந்தவர்கள் முதலான ஆப்கன் நாட்டவர்களை ஜேர்மனிக்கு அழைத்துவருவதாக ஜேர்மன் அரசு வாக்களித்திருந்தது.
அவர்களில் ஆப்கன் நாட்டவரான பெண்ணொருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் அடங்குவர்.
ஜேர்மன் அளித்த ஏமாற்றம்
2021ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் படைகளுக்கு உதவியாக பணியாற்றிவந்தவர்கள் முதலான ஆப்கன் நாட்டவர்கள் சுமார் 2,000 பேரை ஜேர்மனிக்கு அழைத்துவருவதாக ஜேர்மன் அரசு வாக்களித்திருந்தது.

அதை நம்பி ஏராளமானோர் பாகிஸ்தானுக்கு தப்பியோடினர். ஜேர்மன் விசா கிடைக்கும் என இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் காத்திருக்க, ஜேர்மனியில் புலம்பெயர்தல் அரசியலாகிவிட்ட நிலையில், அந்த ஆப்கன் நாட்டவர்களை ஜேர்மனிக்கு அழைத்துக்கொள்ள ஜேர்மன் அரசு தயக்கம் காட்டிவந்தது.
இந்நிலையில், ஜேர்மன் உள்துறை அமைச்சகம், ஜேர்மனிக்கு வருவதற்காக பாகிஸ்தானில் காத்திருக்கும் 640 ஆப்கன் நாட்டவர்கள் இனி ஜேர்மனிக்கு வர முடியாது என்று கூறிவிட, அந்த அகதிகள் கடும் ஏமாற்றம் அடைந்தார்கள்.
புலம்பெயர் பெண்ணொருவருக்கு ஆதரவாக தீர்ப்பு
தான் ஏமாற்றப்பட்டதால், ஜேர்மன் ஃபெடரல் அரசியல் சாசன நீதிமன்றத்தில் அந்தப் பெண் வழக்குத் தொடர்ந்தார்.
இந்நிலையில், அவருக்கு ஆதரவாக அரசியல் சாசன நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜேர்மனிக்கு அழைத்து வருவதாக வாக்களித்த அந்த ஆப்கன் நாட்டவர்கள் அடங்கிய குழுவுக்கு, மொத்தமாக ஜேர்மனிக்கு வர சட்டப்படி அனுமதி மறுக்கமுடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அந்தப் பெண் மற்றும் அவரது பிள்ளைகள் வழக்கை தனியாக பரிசீலிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |