சுவிஸ் பாஸ்போர்ட் வைத்திருந்தும் ஒருவரை சுவிஸ் குடிமகன் அல்ல என்று கூறிவிட்ட நீதிமன்றம்
சுவிட்சர்லாந்தில், பிரெஞ்சுப் பெண்ணான தாய்க்குப் பிறந்த ஒருவரை சுவிஸ் குடிமகன் அல்ல என சுவிஸ் நீதிமன்றம் கூறிவிட்டது.
பிரெஞ்சுப் பெண் ஒருவர் தன் முதல் திருமணம் மூலம் சுவிஸ் குடியுரிமை பெற்றுள்ளார். பிறகு அவரைப் பிரிந்த அந்த பெண், லெபனான் நாட்டவர் ஒருவரை திருமண செய்துகொண்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள Winterthur என்ற இடத்தில், அந்த பிரெஞ்சுப் பெண்ணுக்கும் லெபனான் நாட்டைச் சேர்ந்தவருக்கும் பிறந்தவரைத்தான் இப்போது சுவிஸ் பெடரல் நீதிமன்றம் சுவிஸ் குடிமகன் அல்ல என்று கூறிவிட்டது.
அந்த 22 வயது இளைஞர் சுவிஸ் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்.
ஆனால், ஆறு ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில், சூரிச் அதிகாரிகள் அவருக்கு தவறுதலாக பாஸ்போர்ட் வழங்கிவிட்டதாக பெடரல் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளார்கள். விதிகளின்படி அவர் பாஸ்போர்ட் பெறத் தகுதியானவர் அல்ல என்பது, அவர் தனது பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க முயலும்போதுதான் தெரியவந்தது.
இதற்கிடையில், ஒரு சுவிஸ் மாகாணம் ஒருவரை குடிமகனாக நடத்திவந்தால், அவர் fast-tracked citizenship என்ற நடைமுறைக்கு விண்ணப்பிக்கலாம் என்றொரு விதி உள்ளது.
ஆனால், இந்த நபரைப் பொருத்தவரை, அவருக்கு கடன் இருப்பதால், இந்த நடைமுறை அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது.
இராணுவ வரி கட்டணம் செலுத்தாததால் அவருக்கு கடன் இருப்பதாக கருத்தில் கொள்ளப்பட்ட நிலையில், அவரோ, தான் சுவிஸ் குடிமகன் இல்லை என்றால், தான் இராணுவ வரி செலுத்தத் தேவை இல்லை என்றும், அப்படிப் பார்த்தால் தான் கடனில் இல்லை என்றும் வாதிட்டார்.
ஆனாலும் அவர் பாஸ்போர்ட் பெற தகுதியற்றவர் என்று கூறிவிட்ட நீதிபதிகள், வழக்கின் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, நீதிமன்ற கட்டணத்தை மட்டும் தள்ளுபதி செய்துள்ளார்கள்.