தண்ணீர் காலியாகாமல் இருக்க தெர்மோகோல் போட்டு மூடி வைத்துள்ளோம்: சட்டப்பேரவையில் துரைமுருகன் கிண்டல்
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுவின் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் கிண்டலாக பேசியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை 2 -வது கூட்டத்தொடர் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் இன்று (அக்.9) காலை 10 மணிக்கு தொடங்கியது.
சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு தலைமையில் கூடிய கூட்டத்தில், கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தனர்.
முக்கியமாக, காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசையும், கர்நாடகாவையும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார்.
துரைமுருகன் கிண்டல்
இந்நிலையில், சட்டப்பேரவையில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, "கடந்த ஆட்சியில் முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த பணியை விரைவுபடுத்த வேண்டும். தற்போது, சாக்கடை நீர் கலந்து வருவதால் 24 மணிநேரமும் சுத்தமான குடிநீர் திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும்" என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, "வனத்துறையிடம் அனுமதி வாங்கி பணிகளை தொடங்கியுள்ளோம். விரைவில் மதுரைக்கு குடிநீர் வழங்குவோம்" என்று கூறினார்.
இதற்கிடையில் அமைச்சர் துரைமுருகன், "நிச்சயமாக தண்ணீர் கொடுப்போம். அணையில் இருந்து தண்ணீர் காலியாகாமல் இருக்க தெர்மோகோல் போட்டு மூடி வைத்துள்ளோம்" என்று பேசினார்.
இதனால், சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களுக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |