திங்கட்கிழமை கனடா அமெரிக்காவுக்கிடையிலான நில எல்லை திறப்பு: ஒருவேளை கனடாவுக்கு திரும்பும் நேரத்தில் கொரோனா தொற்றிவிட்டால் என்ன செய்வது?
திங்கட்கிழமை கனடா அமெரிக்காவுக்கிடையிலான நில எல்லை திறக்கப்படும் நிலையில், கனடாவுக்கு திரும்பும் ஒருவருக்கு கொரோனா வந்துவிட்டால் என்ன செய்வது?
அந்த கேள்விக்கான பதில்...
கனடாவுக்குள் நுழையும் யாரென்றாலும், கனடாவுக்குப் புறப்படுவதற்கு முன், 72 மணி நேரத்திற்குள் பிசிஆர் முறையிலான கொரோனாவுக்கான பரிசோதனை செய்து அதன் முடிவை எல்லையில் காட்டவேண்டும்.
கனடாவுக்குள் நிலம் அல்லது கடல் வாயிலாக நுழைபவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தாலும் அவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இருந்தாலும், எல்லை அதிகாரிகள், கொரோனா தொற்றியவர் அடுத்த 14 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதற்கு என்ன திட்டம் வைத்துள்ளார் என்பதைக் கேட்பார்கள். அத்துடன், அவர்கள் அந்த நபரை பொது சுகாதார அலுவலர்களிடம் அனுப்பிவைக்கலாம்.
கனடாவுக்குள் நுழைபவர்களுக்கான கட்டாய ஹொட்டல் தனிமைப்படுத்தல் ஆகத்து மாதத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டாலும், கொரோனா தொற்று உள்ள ஒரு கனேடியர் அல்லது தடுப்பூசி பெறாத கனேடியர் தனக்கு தனிமைப்படுத்திக்கொள்வதற்கு ஒரு இடம் இல்லாத பட்சத்தில், அவர்கள் அரசு ஏற்பாடு செய்த ஒரு இடத்தில் தங்களை எட்டு நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
எல்லையிலிருந்து ஹொட்டல் வரை பயணி பயணிப்பதற்கான செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். ஆனால், ஹொட்டலிலிருந்து வீட்டுக்குச் செல்லும் செலவை பயணிதான் ஏற்கவேண்டும்.