சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா: கூடவே ஒரு ஆறுதலான செய்தியும்...
சுவிட்சர்லாந்தில் இந்த வாரத்திலும் கொரோன தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது. என்றாலும், ஒரே ஆறுதல், இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதுதான்... இந்த வாரத்தில் 4,692 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இது கடந்த வாரத்தை ஒப்பிடும்போது 55 சதவிகிதம் அதிகமாகும். கடந்த வாரத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியவர்களின் எண்ணிக்கை 3,033. தொற்றுக்கு ஆளாகியவர்களில் 97 சதவிகிதத்தினரும் டெல்டா வகை கொரோனாவால் பாதிகப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று அதிகரித்தாலும், இந்த வாரம் கொரோனாவால் பலியானது ஒரே ஒருவர் மட்டுமே. ஆனாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வாரம் மட்டும் 48 பேர் கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சென்ற வாரம், இந்த எண்ணிக்கை 14 ஆக இருந்தது. இதில் கவலையை ஏற்படுத்தியுள்ள விடயம் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களைக் குறித்தது. அத்துடன், குறைந்த அறிகுறிகள் இருந்தாலும் நீண்ட நாட்கள் நீடிக்கும் வகை கொரோனாவும் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.
ஆகவே, அதிகாரிகள் எப்படியாவது மக்களை தடுப்பூசி போடவைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.