கொரோனா தொடர்பில் சுவிஸ் வெளியிட்ட நம்பிக்கை அளிக்கும் தகவல்
சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றால் மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை குறிப்பிட்டத்தக்கவகையில் சரிவடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை லேசாக உயர்ந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சரிவடைந்து வருவதை, எச்சரிக்கையுடனும் அதேவேளை நம்பிக்கையுடனும் அணுகுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், கண்டறியப்படாத அல்லது பதிவு செய்யப்படாத பாதிப்பு எண்ணிக்கை காரணமாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையைவிட உண்மையான எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஓமிக்ரான் அலை உச்சத்தை எட்டியிருக்கலாம் என குறிப்பிட்டுள்ள பெடரல் பொது சுகாதாரத்துறை அதிகாரி, ஆனால் தற்போதைய சுகாதார முன்னெச்சரிக்கைகளை மிக விரைவில் நீக்குவது என்பது சிக்கலில் முடியலாம் என்று எச்சரித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 29,142 என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவார கால சராசரி பாதிப்பை ஒப்பிடுகையில், 1% அளவுக்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனிடையே, தனிமைப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு நாட்களின் எண்ணிக்கையை சுவிஸ் அரசாங்கம் குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் நீட்டிக்கவும் முன்மொழியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.