சுவிட்சர்லாந்தில் கொரோனா சான்றிதழ் எப்போது முடிவுக்கு வரும்? அமைச்சர் தகவல்
கொரோனா பரவல் தடுப்பில் நாடு சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதால், கொரோனா சான்றிதழ் தொடர்பில் கூடிய விரைவில் முடிவெடுக்கப்படும் என சுவிட்சர்லாந்தின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா சான்றிதழ் தொடர்பில் சுவிட்சர்லாந்தின் சுகாதார அமைச்சர் Alain Berset தெரிவிக்கையில், கொரோனா சான்றிதழின் பயன்பாடு முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது என்றார்.
கடந்த ஜூலை மாதத்தில் இருந்தே பயன்பாட்டில் உள்ள குறித்த சான்றிதழில், தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் தகவல்கள், சோதனை மேற்கொண்ட தகவல்கள், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தரவுகள் என அனைத்தும் உள்ளடக்கியிருந்தது.
தற்போதைய சூழலில் நாம் சரியான பாதையில் செல்வதாக குறிப்பிட்ட அமைச்சர், ஆனால் பல கட்டங்களில் கொரோனா தொற்றானது கணிப்புகளை பொய்யாக்கியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அடுத்த சில வாரங்கள் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்றால், தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ள வீட்டில் இருந்தே பணி புரிதல் என்பது பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு மட்டும் வழங்கும் நிலைக்கு கொண்டுவரப்படும், மேலும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் விலக்கிக்கொள்ளப்படும் என்றார்.
ஜனவரி 19ம் திகதி சுவிஸ் அரசாங்கம் கடுமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பிப்ரவரி இறுதி வரை கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் கட்டாயமாக வீட்டில் இருந்து வேலை செய்யும் விதிகள் நீட்டிக்கப்படும் என தெரிவித்திருந்தது.
கொரோனா தொற்றின் ஐந்தாவது அலையில் தற்போது சுவிட்சர்லாந்து உள்ளது. ஓமிக்ரான் மாறுபாடு பரவலால் நாளுக்கும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
ஜனவரி 21ம் திகதி மட்டும் 37,992 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
இருப்பினும், மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றே சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.