கொரோனா வைரஸ் இங்கிருந்து வந்திருக்க வாய்ப்பு அதிகம்! WHO விசாரிக்க வேண்டும்: பிரித்தானியா உளவுத்துறை வைத்துள்ள கோரிக்கை
உலகையே இப்போது உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவில் இருக்கும் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாக, பிரித்தானிய உளவுத்துறை கூறியுள்ளது.
சீனாவில் கடந்த 2019-ஆம் ஆண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், இப்போது உலகில் சுமார் 260-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, கோடிக்கணக்கான உயிர்களை பலிவாங்கியுள்ளது.
தற்போது இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதால், அது மக்களுக்கு போடப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த கொரோனா வைரஸ் பரவல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து இன்னும் உறுதியாக கூற முடியவில்லை.
ஆனால் பல நாடுகள் சீனாவையே குற்றம் சாட்டி வருகின்றன. நிச்சயமாக இது சீனாவில் இருக்கும் ஆய்வகத்தில் இருந்து தான் பரவியிருக்கும் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.
சீனாவின் வூஹான் ஆய்வகத்தில், கடந்த 2019–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர்கள் பலர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக அமெரிக்க உளவு அமைப்பின் அறிக்கை வெளியானது.
அதைத் தொடர்ந்து கொரோனா குறித்து விரைந்து விசாரணை நடத்தி 90 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’என அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.
ஆனால், வூஹானில் தான் கொரோனா பரவியது என்பதை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில், கொரானா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து, முழுமையாக உலக சுகாதார நிறுவனம் விசாரணை நடத்த வேண்டும் என பிரித்தானியா அரசின் தடுப்பூசித் துறை அமைச்சர் நதீம் சகாவி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரசின் மூலதாரம் குறித்து முதலில் இது போன்ற செய்திகள் வெளியானாலும், அதற்கு வாய்ப்பில்லை என பரவலாக கூறப்பட்டது.
ஆனால் இப்போது அது குறித்து பல தரப்பில் இருந்தும் செய்திகள் வெளியாகும் நிலையில், ஆய்வகத்துடன் நெருங்கிய தொடர்புடைய சில நபர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இந்த சந்தேகம் மீண்டும் வலுப்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.